சீன ராணுவத்தினர் தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி வீரமரணம்

0 22764

லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த 3 வீரர்களில் ஒருவர், ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்பது தெரியவந்துள்ளது. அவரது மரண செய்தி அறிந்து குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கடுக்களூரை பூர்வீகமாக கொண்டவர் பழனி. இவர் கழுகூரணி கஜினி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 18 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்த பழனி, அவில்தாராக லடாக் எல்லையில் பணிபுரிந்து வந்தார். பழனிக்கு வானதிதேவி என்ற மனைவியும், பிரசன்னா, திவ்யா என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர்.

கடந்த வாரம் தனது மனைவியுடன் செல்போனில் பழனி பேசியுள்ளார். அப்போது பணி நிமித்தம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தன்னால் பேச முடியாது என்று கூறியுள்ளார்.

பழனியின் தம்பி இதயக்கனி என்பவர் ராணுவத்தில் அலுவலக உதவியாளராக ராஜஸ்தானில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு தான் சீன ராணுவத்தின் தாக்குதலில் தனது அண்ணன் உயிரிழந்த செய்தி முதலில் தெரிந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி தனது அண்ணியிடம் கூறியுள்ளார். பழனியின் மரண செய்தி அறிந்து குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பழனியின் மறைவை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு உறவினர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 22 ஆண்டுளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்த பழனி, இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வு பெற இருந்ததாக கூறப்படும் நிலையில் உயிரிழந்துள்ளார்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தமிழக ராணுவ வீரரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்திய சீன எல்லையில் லடாக் பகுதியில் இந்திய சீன ராணுவத்திற்கு இடையே நடந்த மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, இரவு பகல் பாராது தன்னலம் கருதாமல் நாட்டிற்காக உயிர்தியாகம்  செய்துள்ள இராணுவ வீரர் பழனியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்த இராணுவவீரரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் மேலும் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தவிட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீன ராணுவத்தினரின் தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரரின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், லடாக் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய ராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீர வணக்கம் என்று தெரிவித்துள்ளார். 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி தனது உயிரையும் ஈந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனியின் குடும்பத்துக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments