4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

0 2044

அடுத்த 24 மணி நேரத்தில், கோவை, நீலகிரி, தேனி, திருவள்ளூர் மாவட்டங்களிலும், நாளை  வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

நாளை புதுவை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 3 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் தேவலா, கோவை மாவட்டம், அவலாஞ்சி, வால்பாறை, சோலையாறு, சின்கோனா ஆகிய பகுதிகளில் தலா இரண்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

ஜூன்17 முதல் 19ம் தேதி வரை மத்திய வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

ஜூன்15 முதல் 19-ம் தேதி வரை, மத்திய அரபிக் கடல், தென்மேற்கு, மத்தியமேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை, ஒரு சில நேரங்களில் கடல் அலை 3.2 முதல் 3.6 மீட்டர் வரை எழக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments