தமிழக அரசின் அலட்சியம் காரணமாகவே கொரோனா பரவல் அதிகரித்து விட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

0 3313

கொரோனா மரணங்களை அரசு மறைப்பதாகக் கூறியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசின் அலட்சியம் காரணமாகவே கொரோனா பரவல் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்தபடி, ஜூம் ஆப் மூலம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். நாட்டிலேயே கொரோனா அதிகரிக்கும் வேகத்தில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது என்றும்,

தமிழக அரசின் பொறுப்பின்மையால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டார். மே 15ஆம் தேதியன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8,718 ஆக இருந்ததாகவும், சரியாக ஒரு மாதம் கழித்து, ஜூன் 15-ல் இந்த எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்களை எடுத்துக் காட்டினார்.

4ஆம் கட்ட ஊரடங்கிற்கு பிறகும், இந்தியாவின் மொத்த நோய்த்தொற்றில் 10 சதவீதம் சென்னையில் உள்ளது என்றும், ஊரடங்கை பொறுப்பில்லாமல் அமல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு பன்மடங்கு பெருகியதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 6 மண்டலங்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கான அடிப்படை தேவைகளை அரசு பூர்த்தி வேண்டும், மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5000 ரூபாய் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

கொரோனா மரணங்கள் பற்றிய தகவலை வெளியிட தாமதிப்பதோடு, கொரோனா மரணங்களை தமிழக அரசு குறைத்துக் காட்டுவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டினார். சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த 236 பேரின் மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்று கூறிய அவர், உயிரிழப்பை மறைக்கும் முயற்சிகள், கொரோனா பேரிடரை பொறுப்பற்ற முறையில் அரசு கையாள்வதையே காட்டுகிறது என்றார்.

கொரோனா பாதிப்பு விவரங்களை தெரிவிக்கும்போது ஏப்ரலில் 16 வகையான தகவல்களை தெரிவித்தனர் என்றும், அதன் பிறகு முக்கியமான விவரங்களை மறைத்து 10 வகையான தகவல்களை மட்டுமே தந்தனர் என்றும் மு.க.ஸ்டாலின் புகார் கூறினார். 

32 சதவீதம் பேருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது என தெரியவில்லை எனக் கூறிய மு.க.ஸ்டாலின், சமூகப் பரவல் இல்லை என்று சொல்வது உண்மையானால், பரவல் தொடர்ந்து அதிகரித்துச் செல்வது ஏன்? என கேள்வி எழுப்பினார். 

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஒளிவு மறைவின்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இவை நடைபெறவில்லை என்றால் நீதிமன்றம் செல்ல வேண்டி இருக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments