நடந்தாய் வாழி காவிரி.. விவசாயிகள் மகிழ்ச்சி..!

0 3062

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், திருச்சி முக்கொம்புக்கு இன்று வந்தடைகிறது. நடந்தாய் வாழி காவிரி என சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கும் தண்ணீரை எதிர்பார்த்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார்கள்.

காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12 ஆம் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர், கடைமடை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 86 ஆண்டு வரலாறு கொண்ட மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் 17ஆவது முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

டெல்டா மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் வழியாக ஓடிய இந்த தண்ணீர், நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் நொய்யலை வந்தடைந்தது. அங்கிருந்து, விநாடிக்கு 5,050 கன அடி வீதம் நேற்று மாயனூர் கதவணையை கடந்தது.

சீறிப்பாய்ந்த தண்ணீரை முழுவதும் அப்படியே, காவிரி ஆற்றில் திருப்பி விடப்பட்டது. இந்த தண்ணீர், திருச்சி - முக்கொம்பை இன்று வந்தடையும் என எதிர் பார்க்கப்படுகிறது. இங்கிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லணைக்கு, இந்த தண்ணீர் நாளை சென்றடையும்.

இதற்கிடையே, கல்லணை நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள்.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு உள்ள காவிரி தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் நாகை உள்பட 12 மாவட்டங்களில், சுமார் 16 லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments