காதலனை சந்திக்க செல்லும் பெண்களை குறிவைக்கும் கும்பல்... வீடியோ எடுத்து மிரட்டி பணம்- நகை பறிப்பு

0 12605

ராமநாதபுரத்தில் காதலனை சந்திக்க தனியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்களை நோட்டமிட்டு, அவர்கள் காதலனுடன் இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டி நகை பணம் பறித்து வந்த 6 பேர் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காதலில் விழுந்த பெண்களுக்கு நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்த வீரவனூரை சேர்ந்த 25 வயது திருமணமான பெண் ஒருவர், வீட்டில் இருந்து ஸ்கூட்டியில் தனியாக புறப்பட்டுச்சென்று, பூவிளத்தூர் விலக்கு சாலையில் தனது அத்தை மகனுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

அங்கு காரில் வந்த 6 பேர் கும்பல் அவர்களை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். கணவனை விட்டு வேறொருவனுடன் காதல் செய்கிறாயா? இந்த வீடியோவை உன் கணவனிடம் காட்டுகிறோம் என்று மிரட்டியுள்ளனர். தங்களை காட்டிக் கொடுத்து விட வேண்டாம் என்று கெஞ்சிய இருவரையும் இழுத்து காரில் கடத்திச்சென்று அவர்களிடம் இருந்த நகை பணத்தை பறித்துவிட்டு நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

அதன்பின்னரும் இருவரையும் பலமுறை மிரட்டி அந்த கும்பல் பணம் பறித்துள்ளது. இது குறித்து பெண்ணின் உறவினர் மூலமாக ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக புகார் பிரிவுக்கு புகார் மனு சென்றுள்ளது.

இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் அந்த பகுதியில் காரில் வலம் வந்த மிரட்டல் கும்பலை சேர்ந்த முகமது, இளஞ்செழியன், சேதுபாண்டி, தனசேகரன் , காளிதாஸ், விஷ்ணு உள்ளிட்ட 6 பேர் கும்பலை சுற்றிவளைத்தனர்.

அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்களும் இருந்துள்ளன. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இருசக்கர வாகனங்களில் தனியாக வெளியே செல்லும் மாணவிகள் முதல் திருமணமான பெண்கள் வரை அனைவரையும் இந்த கும்பல் நோட்டமிடுவது வழக்கம்.

படிக்கின்ற வயதில் காதலில் விழுந்த மாணவிகள், கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் ஆண் நண்பர்களுடன் நெருக்கம் காட்டும் குடும்பப் பெண்கள் போன்றோரை பின்தொடர்ந்து சென்று அவர்கள் காதலனுடன் பேசுவதை முதலில் மறைந்திருந்து படம் பிடித்துக் கொண்டு, அந்த பெண் மீண்டும் தனியாக செல்லும் போது வழிமறித்து வீடியோவை காட்டி மிரளவைப்பர்கள், நகை பணம் இருந்தால் அதனை வாங்கி வைத்துக் கொள்வார்கள், கணவனை பிரிந்த பெண்ணாக இருந்தால் மிரட்டி அழைத்துச்சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகின்றது.

இவர்களிடம் சிக்கிய சில விதவைப் பெண்களை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலும் சம்பந்தப்பட்ட பெண்களின் பின்னணி அறிந்த பின்னரே மிரட்ட ஆரம்பிப்பார்கள் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர் திருட்டுப்பயலே சினிமா பாணியில் காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும் இடங்களில் ஒளிந்திருந்து வீடியோ எடுத்து பணம் பறித்து வந்ததாகவும் குற்றஞ்சட்டுகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையும், நாகர்கோவில் காமுகன் காசியையும் மிஞ்சும் வகையில் இந்த மன்மதகும்பல் தினம் தினம் பெண்களை மிரட்டி பணம் பறித்து ஜாலியாக ஊர் சுற்றியுள்ளது.

பெண்களை மிரட்டி பறிக்கும் பணத்தைக் கொண்டு மது மற்றும் கஞ்சா போதையில் சுற்றிய இந்த கும்பல் போகலூர், பரமக்குடி வனப் பகுதியில் மயில், முயல் போன்ற விலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வீடியோ மற்றும் புகைபடங்களும் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளன.

இதுபோன்ற விவகாரங்களில் பாதிக்கப்படும் பெண்கள் காவல் நிலையத்தில் தைரியமாக புகார் அளித்தால் மட்டுமே போலீசாரால் நடவடிக்கை மேற்கொள்ள இயலும், இல்லையேல் மேலும் பல பெண்களின் வாழ்க்கையை இந்த கும்பல் சீரழிப்பது வெளி உலகத்திற்கு தெரியாமலேயே போய் விடும் என்று சுட்டிக்கட்டுகின்றனர் காவல்துறையினர் .

அதே நேரத்தில் இந்த பலாத்கார பிளாக் மெயில் கும்பலிடம் நகை மற்றும் பணத்தை பறிகொடுத்தோர் புகார் அளித்தால் பெயர் ரகசியம் காக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments