தச்சு தொழிலாளியின் சடலத்துக்கு நேர்ந்த அவமரியாதை.. ஏரிக்குள் அடக்கம் செய்த அவலம்..!

0 8343

திருவண்ணாமலை அருகே கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை இடுகாட்டில் அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அருகில் வறண்டு கிடந்த ஏரிக்குள் குழி தோண்டி சடலத்தை அடக்கம் செய்த அவலம் அரங்கேறி உள்ளது.

திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 50 வயது தச்சு தொழிலாளி கடந்த 4 ஆம் தேதி கொரோனா நோய் தோற்றால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், அவரது தம்பியும் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாக்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த தச்சு தொழிலாளி சனிக்கிழமை உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். அவரது சடலத்தை இடுகாட்டில் புதைப்பதால் நோய் தொற்று பரவும் என்ற வதந்தியை உண்மை என நம்பி அங்குள்ள கிராம இடுகாட்டில் சடலத்தை புதைக்க கூடாது என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து சுகாதாரதுறை அதிகாரிகள் பொதுமக்களின் கருத்தை கேட்டறிந்து இறந்த தச்சு தொழிலாளியின் சடலத்தை நல்லவன்பாளையம் கிராமம் அருகே உள்ள சமுத்திரம் ஏரியில் புதைக்க முடிவு செய்தனர். அதன் படி ஏரியின் மையப்பகுதியில் பத்தடி ஆழ குழி தோண்டப்பட்டு உறவினர்கள் தூரத்தில் கண்ணீர் மல்க காத்திருக்க, தூய்மைப் பணியாளர்கள் ஊரக வளர்ச்சி துறை மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா தாக்குதலில் உயிரிழந்த தச்சு தொழிலாளிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். வருகிற ஜூலை மாதம் இரண்டாம் தேதி இரண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தது குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதே நேரத்தில் இறந்தவர்களின் சடலத்தில் கிருமி நாசினி தெளித்து நன்றாக 3 அடுக்கு துணி சுற்றி தூய்மைபணியாளர்களால் எடுத்து வந்து பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்படுவதால் இறந்தவர் சடலத்தின் மூலம் கொரோனா பரவுவதில்லை என்பதை உண்ர்ந்தாவது பொதுமக்கள் இது போன்று கண்மூடித்தனமாக எதிர்ப்பு தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments