அமெரிக்காவில் திசை மாறிய போராட்டம்..!
அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்பொருள் அங்காடியான வால்மார்ட்டை சூறையாடினர்.
அமெரிக்காவின் மின்னாபொலீஸ் நகரத்தில் போலீஸ் தாக்கியதில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டு மரணமடைந்ததையடுத்து இனபாகுபாடு மற்றும் போலீசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், சியாட்டில் நகரத்தில் மேயர் ஜென்னி துர்கனை பதவி விலக வலியுறுத்தியும் போலீஸ் சீர்த்திருத்தத்தை கோரியும் சிட்டி ஹாலில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
புளோரிடாவில் ஹில்ஸ்பர்க் கவுண்டியில் நூற்றுக்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு இருந்த உலகின் முன்னணி பல்பொருள் வர்த்தக நிறுவனமான வால்மார்ட் கடைக்குள் நுழைந்த அவர்கள் கையில் கிடைத்ததையெல்லாம் அள்ளிச் சென்றனர்.
இதுபோன்ற வன்முறைகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாதவை என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒரு லட்சம் டாலர் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போயின.
சியாட்டில் நகரில் மீண்டும் அமைதிப் பேரணி நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளையின மற்றும் கருப்பின மக்கள் பங்கேற்றனர். கொட்டும் மழையில் இனவெறி மற்றும் நிறவெறிக்கு எதிரான பதாகைகளைக் கையில் ஏந்தியவாறு அவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணத்திற்கு நீதி கேட்டும், நிறவெறிக்கு எதிராகவும் லண்டனில் உள்ள ஹைட் பார்க் பகுதியில் பேரணியாகச் சென்றனர். அப்போது அவர்கள் இனவெறிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
Comments