காதல் வளர்ப்பதை பார்த்த சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..! காதல் கொலையும் செய்யும்

0 20934

திருப்பூர் அடுத்த ஊத்துக்குளி அருகே 8 வயது சிறுவன் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை சம்பவம் தொடர்பாக இளம் காதல் ஜோடியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சொட்டகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளர்களான தங்கராஜ் - சுமதி தம்பதியருக்கு இரு மகன்கள். இளைய மகன் பவனேஷ்.

தம்பதியர் காலையில் வேலைக்கு சென்றால் மாலை தான் வீடு திரும்புவார்கள். வியாழக்கிழமை தங்கராஜ் தனது மனைவியுடன் வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில், இரு மகன்களும் சிறுவர்களுடன் குளத்துக்கு அருகில் உள்ள மைதானத்தில் விளையாடி கொண்டு இருந்துள்ளனர்.

மதியம் வரை விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள் அவரவர் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் சிறுவன் பவனேஷ் மட்டும் மாயமானதாக கூறப்படுகிறது. வேலை முடித்து வந்த தங்கராஜ் சுற்றுப்பகுதிகளில் சிறுவனை தேடிய பிறகு, இரவு ஊத்துக்குளி காவல் நிலையம் சென்று மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசாரும் இரவு முழுவதும் தேடியுள்ளனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை பல்லகவுண்டன்பாளையம் குளத்துக்கு ஆடுகளை மேய்க்க சென்றவர்கள், அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் முட்புதருக்குள் சிறுவனின் சடலம் கிடப்பதை பார்த்துவிட்டு ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் நடத்திய விசாரணையில், அது காணாமல் போன எட்டு வயது சிறுவன் பவனேஷ் என்பதும், சிறுவனின் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்மமான முறையில் நடந்த இக்கொலை சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து கொலைக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மாயமான சிறுவனை, பதின் பருவ சிறுமி ஒருவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் காதல் வளர்த்து வந்த ஒரு காதல் ஜோடியை பிடித்து விசாரித்ததாக கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று அந்த பகுதிக்கு கல்லூரி மாணவன் ஒருவன், பள்ளி மாணவியை அந்த பகுதிக்கு அழைத்து சென்று காதல் வளர்த்து வந்துள்ளான். இதனை அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பவனேஷ் பார்த்து விட்டதாகவும், இதில் மாணவி சிறுவனின் பக்கத்து வீட்டு சிறுமி என்றும் கூறப்படுகின்றது.

சிறுவன் தன்னை பார்த்து விட்டதால் வீட்டில் சொல்லி விடுவான் என்று அந்த சிறுமி காதலனிடம் தெரிவித்ததால் , விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அழைத்துச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்து வீசியதாக, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய கத்தி உள்ளிட்டவற்றை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

படிக்க வேண்டிய வயதில் காதலைத் தேடிச்சென்றதால், அதனை மறைக்க கொலையாளியாக மாறி ஜெயிலில் கம்பி எண்ண காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த கொடூர கொலைச் சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments