விழுந்தது விமானம் அல்ல..! புல் தரையில் தீப்பிடித்ததால் பரவிய வதந்தீ..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலவசந்தனூர் ஏரிப் பகுதியில் வானூர்தி விபத்துக்குள்ளாகி விழுந்து வெடித்துச் சிதறியதாக பரவிய தகவலால் அங்கு பரபரப்பு நிலவியது. ஆனால், இது வெறும் வதந்தி என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேல வசந்தனூர் ஏரி, அடம்பூர் கிராமத்திற்கும் பேயாடிக்கோட்டை கிராமத்திற்கும் மையப் பகுதியில் உள்ளது. அங்கு காலை 10 மணி அளவில் ஒரு ஹெலிகாப்டர் பறந்து சென்றதாகவும் சிறிது நேரத்தில் பெரும் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏரியில் புதர்பகுதியில் தீப்பற்றி எரிந்ததால், ஹெலிகாப்டர் விழுந்து வெடித்துச் சிதறிவிட்டதாக ஊகமாக தகவல் பரவத் தொடங்கியுள்ளது. விமானம் விழுந்துவிட்டதாகவும் கூட தகவல் பரவியுள்ளது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனமும் புதுக்கோட்டை அருகே ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டதாக செய்தி வெளியிட்டது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் அங்கு வேடிக்கை பார்க்க திரண்டனர்.
தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் அறந்தாங்கி ஆர்டிஓ கார்த்திகேயன், ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் எஸ்.பி. உத்தரவின்பேரில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதோடு, தடயங்கள் ஏதும் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். இதில் விமானமோ ஹெலிகாப்டரோ வெடித்துச் சிதறியதற்கு எவ்வித தடயமும் இல்லை என்றும், பொதுமக்கள் மத்தியில் பரவியது வதந்தி என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவும் வட்டாட்சியர் தெரிவித்தார்.
இதனிடையே, புதுக்கோட்டை பகுதியில் ராணுவ விமானம் ஏதும் விபத்துக்கு உள்ளாகவில்லை என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
Comments