வைகை ஆற்றில் தடுப்பணை செவ்வூர் மக்கள் கோரிக்கை..!

0 729

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட தடுப்பணைகள் தரமாக இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதுடன், செவ்வூரில் வைகை ஆற்றில் ஒரு தடுப்பணை கட்டவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்காலத்தில் நிரம்பும் கண்மாய் குளம் குட்டை எல்லாம் கோடைக் காலத்தில் வற்றிப்போய் பாலைவனமாய் மாறிவிடும். குடிநீர் எடுப்பதற்காகக் காலிக் குடங்களுடன் குழாயடியில் வரிசை கட்டி நிற்பதும், ஆற்றில் ஊற்றுத் தோண்டிப் பொறுமையாய் நீர் எடுத்துச் சுமப்பதும் இந்தப் பகுதியில் காலங்காலமாய்க் கண்டுவரும் காட்சிகள் தான்.

குடிமராமத்து திட்டத்தில் இராமநாதபுர மாவட்டத்தில் 64 கண்மாய்கள் ஊருணிகள் குளங்கள் தூர்வாரப்பட்டன. அதனால் நிலத்தடி நீர்வளம் பெருக்கியதோடு ஒருசில குளங்களில் இன்னும் தண்ணீர் நிரம்பிக் காணப்படுகிறது.

ஓடைகள் கால்வாய்கள் போன்ற நீர்வழித்தடங்களில் தடுப்பணை கட்டும் திட்டத்தில் ஒருமுறை கட்டி முடித்துப் பணம் பெற்ற பின்னர் மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறித் திரும்பவும் வண்ணம் பூசி ஒப்பந்தக்காரர்கள் பணம் பெறுவதாகக் கூறப்படுகிறது. பல இடங்களில் போதிய சிமென்ட் சேர்க்காமல் பெயருக்குக் கட்டப்பட்ட தடுப்பணைகள் இரண்டாக வாய் பிளந்து காணப்படுகின்றன.

சத்திரக்குடி, போகலூர் ஆகிய ஊர்களில் பல இடங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளால் மக்களுக்குப் பயன் ஏதும் இல்லை என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். செவ்வூரில் வைகை ஆற்றில் தரமான தடுப்பணை கட்டிக் கொடுத்து இப்பகுதி மக்களின் தாகத்தைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு நிதியைப் பயனுள்ள திட்டத்தில் பொதுமக்களுக்காகச் செலவிட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். பணத்தைச் செலவிட்டதாகக் கூறிக் கணக்குக் காட்டி வீணான திட்டங்களை நிறைவேற்றுவது ஒப்பந்தக்காரர்களுக்கு மட்டும்தான் பயனளிக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments