உயிரைப் பணயம் வைத்து.... பாசப் போராட்டம்.

0 5428

சென்னையில், ஆசையாக வளர்த்த பூனை கிணற்றில் தவறி விழுந்ததால், அதை உயிருடன் காப்பாற்றிவிட்டு,  மேலே ஏற முயன்ற போது கிணற்றுக்குள் விழுந்த 80 வயது ஓய்வு பெற்ற பேராசிரியரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். 

சென்னை அமைந்தகரை அய்யாவு காலனியில் வசித்து வருபவர் பி.என்.டயர்ஸ். 80 வயதான இவர் லயோலா கல்லூரியில் 40 ஆண்டுகாலம் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் வீட்டின் முதல் தளத்தில் தனது மகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு வளர்ப்பு பிராணிகள் மீது பாசம் என்பதால் அந்த தெருவில் உள்ள நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உணவளித்து வீட்டின் தரை தளத்தில் அவை இருக்கவும் இடம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் வளர்க்கும் பூனை ஒன்று நிலைதடுமாறி வீட்டிற்கு பின்புறம் 30 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்துள்ளது.

இதனை கண்ட டயர்ஸ், உதவுவதற்கு அங்கு யாரும் இல்லாததால் உடனடியாக அருகிலிருந்த சிறிய ஏணியை எடுத்து கொண்டு வந்து கயிறு மூலம் கிணற்றுக்குள் அவரே இறங்கி, பூனையை காப்பாற்றிவிட்டார்.

ஏணி மூலம் கிணற்றில் இருந்து வெளியே வர முயற்சித்த போது, டயர்ஸ் நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

அப்போது, அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்க முயற்சி செய்தனர். அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததையடுத்து கீழ்ப்பாக்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு துறையினர் சுமார் 6 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லேசான காயங்களுடன் கிணற்றில் இருந்த டயர்சை சுமார் 1 மணி நேரம் போராடி மீட்டனர்.

உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு பேராசிரியர் டயர்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

வாயில்லா ஜீவன் உயிருக்கு போராடுவதை பார்த்து, தனது முதுமை பற்றி கவலை கொள்ளாமல் தானே இறங்கி காப்பாற்ற முயன்ற அவரது துணிச்சலை தீயணைப்பு துறையினர் பாராட்டினர்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments