பள்ளிகள் திறக்கும் முன்பே ஆன்லைனில் கல்வி கட்டணக் கொள்ளை..! பெற்றோர்கள் மனநிலை என்ன ?

0 37967

தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கபடாத நிலையில் ஆன்லைனில் பாடம் நடத்துவதாக கூறும் பெரும்பாலான தனியார் பள்ளிகள், மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்விகட்டணத்தை செலுத்த வற்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாத நிலையில் 99 சதவீத தனியார் பள்ளிகள் கடந்த 8ஆம் தேதி முதல் ஆன்லைனில் பாடங்களை நடத்த தொடங்கி விட்டனர்.

ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு வகுப்புக்கென்று தனியாக வாட்ஸ் ஆப் குழு உருவாக்கி அதன் மூலம் மாணவர்களுக்கு வீடியோக்களை அனுப்பி பாடம் நடத்தி வருகின்றனர்.

வீடியோக்களில் தங்கள் ஆசிரியைகள் சொல்வதை கேட்டு படித்து புரிந்து கொண்டு, பாடங்களை படித்து, நோட்டில் எழுதி, போட்டோ எடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியையின் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்க வேண்டும்,

அதனை அவர்கள் திருத்தி அனுப்புகின்றனர். இப்படித்தான், ஒரு நாளைக்கு 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை இடைவேளையுடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தனியார் பள்ளிகளில் எவரெல்லாம் கட்டணம் கட்டியிருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த முறையில் பாடம் நடத்தப்படுகிறது.இதனால், கல்வி கட்டணம் செலுத்தாத குழந்தைகளின் பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆன்லைன் வாட்ஸ் அப் குழுவில் சேர இயலாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தங்கள் குழந்தைகளின் கல்வி வீணாகி விடக் கூடாதே என்று வட்டிக்கு பணம் வாங்கி கல்விக் கட்டணம் செலுத்தும் நிர்பந்தத்தை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் ஏற்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிலும் லட்சங்களில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி ரொம்ப உஷார்... கல்விக் கட்டணம் செலுத்த வரும் பெற்றோர்களாலும் அவர்கள் கொடுக்கும் பணத்தாலும் பள்ளி நிர்வாகிகளுக்கு கொரோனா வந்து விடக்கூடாது என்பதற்காக ஆன்லைனிலேயே கல்விக்கட்டணத்தை செலுத்தச் சொல்லி வீடியோ ஒன்றை அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

அரசின் எச்சரிக்கையையும் மீறி அடாவடியாக தனியார் பள்ளிகள் கட்டண வசூலில் ஈடுபடுவதாக பெற்றோர் மாணவர் நலச்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்..

பெற்றோர்களிடம் இருந்து பணம் வசூலிக்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளை கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், இதனால் பிள்ளைகளுக்கு எந்த பயனும் இல்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர், பள்ளி விடுமுறை என்றாலும் தொடர்ந்து மின் கட்டணம், ஆசிரியர் சம்பளம், ஓட்டுநர் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாலும், மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும் ஆன்லைனில் வகுப்பு எடுப்பதாக தெரிவித்தனர்.

ஆன்லைன் வகுப்புகளை வரவேற்பதாக சொன்ன சில பெற்றோர், இதன் மூலம் தங்கள் பிள்ளைகளின் கல்வி கற்கும் திறனை நேரடியாக தாங்கள் அறிந்து கொள்ள முடிந்ததாக தெரிவிக்கின்றனர்

சுருங்கச் சொன்னால் தனியார் பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகள் பணமிருக்கும் குடும்பத்தினருக்கு கொண்டாட்டமாகவும்,, பணமில்லாத ஏழை பெற்றோருக்கு வழக்கம் போல திண்டாட்டமுமாகவே இருக்கின்றது.

அதேநேரத்தில் அரசு பள்ளி மாணவர்களோ, பள்ளிக்கூடம் எப்போது திறக்கும் என்பதே தெரியாத காரணத்தால், 3 மாதங்களுக்கு முன்பு தாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதையே மறக்கும் அளவுக்கு கூட்டாளிகளுடன் வீதியில் காற்றாடி பறக்கவிட்டு பொழுதை கழித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments