சென்னையில் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

0 15705

சென்னையில் ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா என்பது குறித்து வெள்ளியன்று விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 36 ஆயிரம் பேருக்கும், சென்னையில் மட்டும் 25 ஆயிரம் பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரில் 70 விழுக்காட்டினர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் இதுகுறித்து அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? என்றும், இப்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீதிமன்றம் தாமாக முன்வந்த வழக்கை எடுக்கவில்லை என்றும், தமிழகத்தின் குடிமக்கள் என்ற முறையிலும், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இக்கேள்வியை எழுப்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதுகுறித்து வெள்ளியன்று விளக்கம் அளிக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கெனவே, சென்னையில் ஊரடங்கைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments