'இடிந்த வீடுகள்... கொல்லப்பட்ட விலங்குகள்..!' - பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதலால் பரிதாபம்...

0 11973

ந்திய கிராமங்கள் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு மற்றும் ஷெல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருக்கிறது பாகிஸ்தான். இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், காஷ்மீரின் ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்ட கிராமங்கள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் பல்வேறு வீடுகள் சேதமாகியிருக்கின்றன; பல கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றன. திடீரென்று நடத்தப்பட்ட பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலால் பதற்றமும் பயமும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள கிராம மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதல் குறித்துப் பேசிய இந்திய ராணுவ அதிகாரிகள், "நேற்று அதிகாலையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே உள்ள ஆறுக்கு மேற்பட்ட இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காஷ்மீர், ராஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா செக்டர் பகுதியில் கனரக ஷெல் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த வலிமையான ஷெல் ஏவுகணைத் தாக்குதலில் ஆறுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் வீடுகள் சேதமாகியிருக்கின்றன, பல்வேறு விலங்குகள் கொல்லப்பட்டன" என்று தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் நடந்தபோது கிராம மக்கள் பதுங்கு குழிகளில் பதுங்கிக்கொண்டதால்  உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. மேலும், நேற்றிரவும் 8.45 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. அதனால், இந்திய ராணுவமும் திரும்பித் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பொதுவாக, தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முயற்சி செய்யும் போது இது போன்ற தாக்குதலைப் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்வது வழக்கம்.
 
இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்தே இந்திய ராணுவம் ஜம்மு - காஷ்மீரில் தனது பிடியை இறுக்கி வருகிறது. பல தீவிரவாதிகளும், தளபதிகளும் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகிறார்கள். அதனால், தீவிரவாதிகளுக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலால், அப்பாவி கிராம மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments