நெருக்கடிகளை வெற்றிக்கான வாய்ப்புகளாக மாற்றுவோம் - பிரதமர் மோடி

0 3690

கொரோனா உள்பட நாடு எதிர்கொள்ளும் அனைத்து நெருக்கடிகளையும், நாடு  முன்னேறுவதற்கான வாய்ப்பாக, ஒவ்வொரு இந்தியரும் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லியில் இந்திய வர்த்தக கழகத்தின்  95 ஆவது வருடாந்திர கூட்டத்தில் மோடி துவக்க உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், கொரோனா உள்ளிட்ட  நெருக்கடிகளை நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய திருப்புமுனையாக நாம் மாற்ற வேண்டும் என்றார். சுயசார்புடைய இந்தியாவை உருவாக்குவதே அந்த திருப்புமுனை எனவும் மோடி விளக்கமளித்தார். 

இதர உலக நாடுகள் கொரோனாவுடன் போராடுவதை போலவே இந்தியாவும் அதற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளது என்ற மோடி, இந்த சிக்கலான காலகட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள், புயல்கள், நிலநடுக்கங்கள் போன்ற தீங்குகளையும் நாடு சந்தித்து வருவதாக குறிப்பிட்டார்.

இந்த சவால்களை எல்லாம் சமாளிக்க நாம் ஒன்றுபடுவோம் என்று அறைகூவல் விடுத்த மோடி, நமது உறுதியான முடிவுகளே நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் கூறினார்.

உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதுடன், வெளிநாடுகளில் இந்தியப் பொருட்களுக்கான சந்தையை உருவாக்க வேண்டும் என விவேகானந்தர் முன்பே எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். விவேகானந்தர் காட்டிய பாதை கொரோனாவுக்குப் பின்னர் இந்தியாவுக்குத் தூண்டுதலாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

துணிச்சலுடன் முடிவெடுப்பதற்கும், துணிச்சலாக முதலீடு செய்வதற்குமான நேரம் இது எனத் தெரிவித்தார். உலக அளவில் போட்டியிடக் கூடிய உள்நாட்டு சப்ளை செயினை உருவாக்க வேண்டிய நேரமிது எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments