பாரதிய ஜனதா வாங்கிய 70,000 டி.வி , 15,000 எல்.இ.டி; மூங்கில் மரங்களில் தொலைக்காட்சிகள் தொங்கும் பின்னணி

0 18090

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் பல விஷயங்கள் தலைகீழாக மாறியுள்ளன. முகத்தில் மாஸ்க், பையில் சானிட்டஸைர் உடன் அலையும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பிரமாண்ட திருமணங்கள், திருவிழாக்களும் இல்லை. அரசியல் கூட்டங்களும் இல்லை. சாலேயோர கட்டஅவுட்களையும் காண முடியவில்லை. இப்படி பல காட்சிகளை கொரோனா காணாமலேயே செய்துவிட்டது.

கொரேனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், அனேகமாக 2021- ம் ஆண்டு வரை கொரோனாவின் பாதிப்பு இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.  இதனால், தேர்தல் பிரசாரங்களுக்கும் அரசியல் கட்சிகள் வேறு  உத்தியை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளன. அதுதான் மெய்நிகர் பிரசாரம். மக்களிடத்தில் சோசியல் மீடியா அல்லது தொலைக்காட்சி வழியாக பேசுவதுதான் மெய்நிகர் பிரசார உத்தி.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்காக இப்போதே பாரதிய ஜனதா கட்சி  தயாராகி வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கத்தில் நடத்திய தன் முதல் மெய்நிகர் கூட்டத்திலேயே' மம்தா பானர்ஜி அரசியல் அனாதை ஆக்கப்படுவார் என்று கடுமையாகவே விமர்சித்திருந்தார். இதனால், மேற்கு வங்கத்தில் இப்போதே தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 

பிரசாரம் செய்தால் மட்டும் போதுமா... தங்களின் பிரசாரம் மக்களிடத்தில் போய் சேர வேண்டாமா? மேற்குவங்கத்தின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் தொலைக்காட்சி வசதியே கிடையாது. அப்படியென்றால், தங்களின் பிரசாரம் மக்களை எப்படி போய் சேரும் என்று யோசித்த பாரதிய ஜனதா கட்சி 70,000 டி.வி 15,000 எல்.இ.டி தொலைக்காட்சிகளை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொலைக்காட்சிகள் மேற்கு வங்கத்தின் பல  கிராமங்களில்  பொருத்தப்பட்டுள்ளன.

மேற்கு வங்க கிராமம் ஒன்றில் முங்கில் மரங்களுக்கிடையே தொலைக்காட்சி ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதையும் அதில் அமித்ஷா உரையாற்றுவது போன்ற புகைப்படத்தையும்  பா.ஜ.க தேசிய செயலாளர் பி.எல் சந்தோஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் இந்த பிரசார உத்திக்கு எதிர்ப்பும் கிளம்பாமல் இல்லை. ''இந்த கொரோனா காலத்தில் கூட ஒரு குடும்பத்துக்கு பாரதிய ஜனதா அரசு  ரூ. 7,500 வழங்காது. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வாகனமும் ஏற்பாடு செய்து தராது. ஆனால், தேர்தல் பிரசாரத்தில் விதவிதமாக ஈடுபடுகிறது'' என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

'புலம் பெயர் தொழிலாளர்கள் இன்னும் வீடுகளுக்கே போய் சேரவில்லை. அவர்களுக்கு முன்னால் பாரதிய ஜனதாவின் தொலைக்காட்சிகள் போய் சேர்ந்து விட்டன ' என்று ஆம் ஆத்மி கட்சியும் பாரதிய ஜனதா கட்சியை சாடியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments