இந்தியா-சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை ராணுவ அதிகாரிகள் முடிவு

0 1719

லடாக் எல்லையில் 3 இடங்களில் இருந்து சீனா பின்வாங்கிய நிலையில், பாங்காங்சோ பகுதியில் மட்டும் இருதரப்புக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருவதால் இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

மே மாத தொடக்கத்தில் இந்திய எல்லைக்கு உட்பட்ட கிழக்கு லடாக் பகுதியின் 4 இடங்களில், சீனப் படைகளின் அத்துமீறலால் இருதரப்பு ராணுவ வீரர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் படைகளைக் குவித்ததால் பதற்றம் அதிகரித்தது.

கடந்த 6ம் தேதி ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், எல்லைப் பிரச்சனையை இணக்கமான முறையில் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.

இதன்காரணமாக, மோதல் போக்கு நிலவிய கால்வான் பள்ளத்தாக்கு பகுதியின் 2 இடங்களிலும், Gogra-Hot Springs என்ற இடத்தில் இருந்தும் சீனப் படைகள் சற்று பின்வாங்கியுள்ளன.

அதேசமயம், இந்திய ராணுவம் நீண்ட காலமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வரும் பாங்காங்சோ ஏரியின் வடகரையில் அமைந்துள்ள, சுமார் 8 கிலோமீட்டர் தூர இடைவெளி கொண்ட 4 மலைக்கூம்புகள் அடங்கிய பகுதியை சீன ஆக்கிரமித்துள்ளது. இதனால், இருதரப்புக்கும் இடையே அங்கு தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், இந்திய தரப்பில் மேஜர் ஜெனரல் அபிஜித் சீனாவின் கர்னல் மட்ட அதிகாரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் சில கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றபின் அங்கு இயல்புநிலை திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், மோதல் போக்கு ஏற்பட்ட 4 இடங்களிலும் ஏப்ரல் மாதத்தில் இருந்த அமைதி நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments