தடைவிதிப்பது எளிது, நடைமுறைப்படுத்துவது கடினம்! - நொறுக்குத்தீனி பிளாஸ்டிக் தடை சாத்தியமா?

0 4198

சுற்றுச் சூழலுக்குப் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது, பிளாஸ்டிக். உற்பத்தி செய்தல், பயன்படும் காலம், பயன்பாடு முடிந்த பிறகு கழிவு நிலை என்று அனைத்து நிலைகளிலும் சுற்றுச் சூழலுக்கும், பயன்படுத்துபவர்களுக்கும் அதீத சீர்கேட்டை உருவாக்குகின்றன. மனிதனின் காலடி கூட பதியாத அமேசான் வனம், உலகின் ஆழமான பசிபிக் பெருங்கடல் பகுதியில் கூட பிளாஸ்டிக் தடம் பாதித்துவிட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டின் பேராபத்தை உணர்ந்த தமிழக அரசு கடந்த ஆண்டு 2019, ஜனவரி 1 - ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களான ஷீட், தட்டு, டீ மற்றும் தண்ணீர் கப், தண்ணீர் பாக்கெட், ஸ்ட்ரா, கேரி பேக், பிளாஸ்டிக் உள்ளிட்ட 14 பொருள்கள் தடை விதித்தது.

பொதுமக்கள் மத்தியிலும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது, இந்த வரவேற்பு. அறிவிப்பு வெளியான ஒரு சில மாதங்களுக்குத் தமிழக அரசும் பெரும் கெடுபிடியைக் காட்டியது. மக்கள் துணிப்பைக்கு மாறத் தொடங்கினார்கள். பிளாஸ்டிக்கைத் தவிர்த்தார்கள். உணவகங்களும் பிளாஸ்டிக் தாள்களை விடுத்து வாழை இலைக்கு மாறின. பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் பல டன் பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த தடை அமலுக்கு வந்ததில் இருந்து சென்னையில் மட்டும் கடந்த 2019, மார்ச் 30 - ம் தேதி வரை 3457 கடைகளில் சோதனை நடத்தி 6451.5 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

image

பால் பொருட்கள், எண்ணெய், மருந்து ஆகியவற்றைக் கட்டுவதற்குப் பயன்படும் பிளாஸ்டிக், வெளிநாட்டு ஏற்றுமதிக்குத் தேவையான பிளாஸ்டிக், மக்கக் கூடிய பிளாஸ்டிக் ஆகியவற்றுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டாலும் தின் பண்டங்கள், பால் பொருள்கள், நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றுக்குப் பிளாஸ்டிக் பொருள்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால்,  பிளாஸ்டிக் தடையின் நோக்கமே கேள்விக்குறியானது.

பல தரப்பினரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நொறுக்குத் தீனி உள்ளிட்ட உணவுப் பொருள்களை அடைத்து விற்கும் பிளாஸ்டிக்குக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். நீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் விலக்களிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பயன்பாட்டையும் தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. இந்த சூழலில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், 'உற்பத்தி நிறுவனங்கள் 'பேக்' செய்யப் பயன்படும் பிளாஸ்டிக் பொருள்களால் தமிழகத்தை பிளாஸ்டிக் மாசு இல்லாத மாநிலமாக மாற்ற முடியவில்லை. எனவே, அவற்றையும் விதிவிலக்கு பட்டியலில் இருந்து நீக்கலாம்' என்று கடிதம் எழுதியிருந்தார்.

image

இவற்றின் அடிப்படையில் பிளாஸ்டிக் தடை குறித்து தமிழக அரசு ஏற்கெனவே, வெளியிட்டிருந்த அரசாணையில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக  நொருக்குத்தீனி அடைத்து விற்பனை செய்யப்படும் சீலிடப்பட்ட பிளாஸ்டிக் கவர்களைத் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அரசாணை மூலம் சிப்ஸ், முறுக்கு, தின்பண்டங்கள், பிஸ்கட் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகள் மற்றும் சோப்புகள் பேக் செய்யும் பிளாஸ்டிக்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.  

சுற்றுச் சூழலுக்குக் கேடு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று போராடி, 'துணிப்பை இயக்கம்' நடத்தி வரும் சமூக ஆர்வலர் ரமேஷிடம் தமிழக அரசின் தடை குறித்து பேசினோம்...

"தமிழக அரசின் இந்தத் தடை உத்தரவானது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தத் தடையை அரசு எந்த அளவுக்கு நடைமுறைப் படுத்தப்போகிறது என்ற கேள்வி எழுகிறது. கடந்த வருடம், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கேரி பேக் உள்ளிட்ட பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் குறிப்பிட்ட அளவுக்கு பிளாஸ்டிக் பேக், தண்ணீர் பாட்டில், டீ கப் உள்ளிட்டவற்றின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், பிளாஸ்டிக்குக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் அலுமினியம் ஃபாயில் எப்படி கையாளப்படுகிறது என்பது குறித்து எந்தவித வரையறையும் இதுவரை வகுக்கப்படவில்லை. அலுமினியம் ஃபாயில் குப்பையோடு குப்பையாகப் போடப்படுகிறது. அவை முறையாகப் பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறதா என்பதே கேள்விக் குறியாக இருக்கிறது. இது போன்று இந்தத் தடையும் புதுவிதமான சிக்கல்களை உருவாக்கும் விதமாகவே இருக்கிறது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் இன்றளவும் பயன்படுத்தப்படுவதைக் காண முடிகிறது. ஒரே நாளில் தடை விதிக்காமல் படிப்படியாக மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டு இது மாதிரியான தடைகளை விதித்தால் முழுமையாக செயல்படுத்த முடியும். இதனால் மக்களும் பயன் பெறுவார்கள்; வியாபாரிகளும் பாதிக்கப்படமாட்டார்கள். பிளாஸ்டிக்குக்கு மாற்றாகப் பயன்படுத்தும் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்க அரசு ஊக்குவிக்க வேண்டும்.

image

இந்தத் தடையானது தமிழகத்தில் உள்ள சிறு குறு வணிகர்களை மட்டும் கட்டுப்படுத்துமா அல்லது பன்னாட்டு நிறுவனங்களையும் கட்டுப்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் பெரும்பாலான நொறுக்குத் தீனிகள் பிளாஸ்டிக் மூலமாகவே பொட்டலம் இடப்படுகிறது. அவற்றின் உற்பத்தித் தொழிற்சாலைகள் மும்பை, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள பிளாஸ்டிக் தடையானது வெளி மாநிலங்களில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலைகளை எப்படிக் கட்டுப்படுத்தும்? வெளி மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் நொறுக்குத் தீனிகள் விற்பனைக்கு இனி தடை விதிக்கப்படுமா என்பதை அரசு விளக்க வேண்டும். அரசு இந்த தடை அறிவிப்பை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள சிறு - குறு வியாபாரிகள் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்படக்கூடாது " என்றார். 


பிளாஸ்டிக் பொருள்கள் மீதான உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கான தடை தொடர்ந்தாலும் பல இடங்களிலும் தடையை மீறிப் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. அதே மாதிரி இந்தத் தடையும் ஏட்டளவில் மட்டுமே இல்லாமல் செயல்பாட்டளவிலும் இருக்க வேண்டும். மேலும், இந்தத் தடை சிறு குறு வியாபாரிகள் மட்டுமல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments