பிறந்த நாளே, 'இறந்தநாள்' ... ஜெ. அன்பழகன் இறப்பில் பெரும் சோகம்!

0 18015


'ஜெ.அன்பழகனின் தந்தை பழக்கடை ஜெயராமன், இப்படித் தான் மேடைகளை புதுமை குலுங்க நிர்மாணிப்பார். ஒரு முறை பழங்களைக் கொண்டே மேடையை நிர்மாணித்திருந்தார். அவருடைய செல்வன் ஜெ.அன்பழகன் தந்தையை மிஞ்சும் மகனாக இந்தப் பொதுக்கூட்ட மேடையை நிர்மாணித்து விட்டார்!'

கடந்த 2013- ம் ஆண்டு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்திலே பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கருணாநிதியிடம் இப்படி பாராட்டு பெற்ற திமுக எம்.எல்.ஏ அன்பழகன் இப்போது உயிருடன் இல்லை.

பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு பிறகு மற்றோரு முக்கிய ஆளுமையை தி.மு.க  இழந்துள்ளது.

கருணாநிதி மறைவுக்கு பிறகு , ஸ்டாலினுடன் மிக நெருக்கமாக இருந்த ஜெ. அன்பழகன் கொரோனா பாரவி வரும் காலத்தில், தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார். இதனால், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த ஜூன் 2- ந் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் வழியாக அவருக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வந்தது. ஹைதரபாத்திலிருந்து தெலங்கான ஆளுநர் தமிழிசையின் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு மருந்து வரவழைக்கப்பட்டும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 8.05 மணிக்கு இறந்து போனார்.

ஜெ. அன்பழகன் இறப்பையடுத்து, இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் ரேலா மருத்துவமனைக்கு சொன்றார். அவருடன் தி.மு.க முக்கிய தலைவர்களும் சென்றனர். ‘கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததால், அஞ்சலி நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்பதால், மருத்துவமனையிலேயே தி.மு.க தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஜெ.அன்பழகன் உடல் சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கண்ணம்மாப்பேட்டை மயானத்தில்  அவரின் உடல் அடக்கம் நடைபெறுகிறது. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இறுதி சடங்கு நிகழ்சியில் அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த 2001- ம் ஆண்டு முதன்முறையாக தியாகராய நகர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு ஜெ. அன்பழகன் வெற்றி பெற்றார். 2011- ம் ஆண்டு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 2016- ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார். தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அன்பழகன் 1958 - ம் ஆண்டு ஜூன் 10- ந் தேதி பிறந்தார்.  தற்போது அவருக்கு 62 வயதாகிறது. பரம்பரை தி.மு.க காரரான அன்பழகனின் தந்தை பழக்கடை ஜெயராமன் ஆவார்.

பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ள, ஜெ. அன்பழகன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பார். சட்டமன்றத்தில் ஆளும் கட்சியினரை அதிரடியாக விமர்சிக்கும் எம்.எல்.ஏ - க்களில் இவரும் ஒருவர். ஆதி பகவான்,உள்ளிட்ட இரு தமிழ் படங்களையும் ஜெ. அன்பழகன் தயாரித்துள்ளார். தியாகராய நகரில் மகாலக்ஷிமி தெருவில் அன்பழகன் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அன்பழகனுக்கு மனைவி மகன் மற்றும் மகள் உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments