வாயால் வழுக்கி விழுந்த வம்பன்.. மாவுக்கட்டோடு கைதான பரிதாபம்..!

0 18401

திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ அனிதாராதா கிருஷ்ணனையும், அவரது சமுதாய பெண்களையும் இழிவாக பேசி முகநூலில் வீடியோ வெளியிட்ட போதை இளைஞர் மாவுக்கட்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்செந்தூர் சலவையாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவன் போதை தலைகேறியதும். யாரையாவது ஆபாசமாக பேசி வீடியோ பதிவிடுவது வழக்கம் என்று கூறப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனை, அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட மணிகண்டன், போலீசில் சிக்காமல் தலைமறைவாகி விட்டான். அவன் இருக்கும் இடம் தெரியாத நிலையில் காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ சார்ந்த சமுதாய பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசி முகநூலில் வீடியோ பதிவிட்டதால் மீண்டும் சர்ச்சை உருவானது. தொடர்ந்து தன்னை யாரும் பிடிக்க முடியாது என்றும் ஒன்றும் செய்து விட முடியாது என்றும் சவால் விடும் வகையில் அடுத்தடுத்து வீடியோ வெளியிட்டான்.

இதனை கண்டித்து பல்வேறு அமைப்பினர் திருச்செந்தூர் காவல் நிலையம் தொடங்கி சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வரையிலும் ஏராளமான புகார்கள் அளித்தனர்

இந்த நிலையில் குலசேகரன்பட்டினம் பகுதியில் வலது கையில் மாவுக்கட்டுடன் மணிகண்டனை திருச்செந்தூர் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், பெங்களூரில் இருப்பது போன்று முகநூலில் குறிப்பிட்டு வந்த இளைஞர் மணிகண்டன் உண்மையில் கேரள மாநிலம் குருவாயூரில் சுற்றி திறிந்ததாகவும் முகநூலில் அவர் பேசிய வீடியோ வைரலான நிலையில், குறிப்பிட்ட சமுதாய இளைஞர்கள் அவரை அடையாளம் கண்டு துரத்தியதாகவும் கூறப்படுகின்றது.

அப்போது அவர்களிடம் தப்பிச்செல்வதற்காக அந்தவழியாக சென்ற காய்கறி லாரி ஒன்றில் பாய்ந்து ஏறி குதித்துள்ளார். இதில் நிலைதடுமாறி லாரிக்குள் வழுக்கி விழுந்ததால் மணிகண்டனின் வலது கை முறிந்ததாகவும், அவரது கெட்ட நேரம் அந்த லாரி திருச்செந்தூருக்கே வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்த போலீசார், கைவலியுடன் அவதிபட்ட மணிகண்டன் கையில் மாவுக்கட்டு போட்டுக் கொண்டு குலசேகரன் பட்டினம் பகுதியில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

வாயால் வம்பிழுத்து, வலுக்கி விழுந்ததால் மாவுக்கட்டு போடப்பட்ட மணிகண்டன் மீது கொலை மிரட்டல், சமூக அமைதியை கெடுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முகநூலில் கருத்து பதிவிடுவோர், நாம் வெளி நாட்டில் இருக்கிறோம், வெளியூரில் இருக்கிறோம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற வரம்பு மீறிய மனநிலையில் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்து வீடியோ பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் மணிகண்டன் போல கைகளில் மாவுக்கட்டுடன் ஜெயிலில் கம்பி எண்ணும் நிலைவரும் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments