சச்சின் நிச்சயம் கிரேட்தான், ஆனாலும் இன்சமாமுக்கு அடுத்த இடம் ஏன்? - வாசிம் அக்ரம் சொல்லும் புது காரணம்

0 6049
வாசிம் அக்ரம், சச்சின்

சமீபத்தில், தன் கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் வெளியிட்டார். பட்டியலில் முதலிடத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் முன்னாள் கேப்டன்  விவியன் ரிச்சர்ட்ஸ் இருந்தார். தொடர்ந்து மார்ட்டின் குரோவ், பிரையன் லாரா, இன்சமாம் உல் ஹக் , சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

இன்சமாமுக்கு அடுத்த இடத்தை சச்சினுக்கு வாசிம் அக்ரம் கொடுத்தது சற்று வியப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. தற்போது, பாகிஸ்தான் அணியின் முன்னாள் டீம் மேட் பாசித் அலிக்கு யுடியூப் சேனல் வழியாக ஜாம்பவான் பேட்ஸ்மேன்களை வரிசைப்படுத்தியதற்கான காரணிகளை வாசிம் அக்ரம் பட்டியலிட்டுள்ளார். 

'' கிரிக்கெட் உலகில் எந்த வீரருடனும் ஒப்பிட முடியாத கரிஷ்மா விவியன் ரிச்சர்ட்சுக்கு உண்டு. தான் ஆடும் போது ஆட்டத்தில் மிகப் பெரிய தாக்கத்தை விவியன் ஏற்படுத்துவார். இந்த ஐந்து ஜாம்பவான்களுடன் 1985 முதல் 2000- ம் ஆண்டு வரை விளையாடியுள்ளேன். மற்றவர்களுடன் விவியன் ரிச்சர்ட்ஸை ஒப்பிடவே முடியாது.

இரண்டாவது இடத்திலுள்ள மார்ட்டிக் குரோவ் அற்புதமான டெக்னிக்குடன் ஆடுபவர். ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள எந்த டெக்னிக்கும் இல்லாத காலக்கட்டத்தில் ஃப்ரன்ட்புட் வைத்து எங்கள் பந்துவீச்சை அவர் சிறப்பாக எதிர்கொண்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரின் போது, மூன்று போட்டிகளில் வாக்கர் யூனஸ் 30 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நானும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். ஆனால் , எங்கள் ரிவர்ஸ்விங் பந்துவீச்சை தன் நேர்த்தியான டெக்னிக்குகளால் சமாளித்து இரண்டு சதங்களை மார்ட்டின் குரோவ் அடித்தார். அற்புதமான அவரின் டெக்னிக் நிறைந்த ஆட்டத்தின் காரணமாக, மார்ட்டின் குரோவுக்கு இரண்டாவது இடம் கொடுத்தேன்.

மூன்றாவது இடத்திலுள்ள பிரையன் லாராவுக்கு பந்துவீசுவது கடினம். மிகவும் குவாலிட்டியான பேட்ஸ்மேன். எந்த திசையில் எப்படி பந்து வீசினாலும் அவர் சர்வசாதாரணமாக எதிர்கொள்வார்.

சச்சினுக்கு ஐந்தாவது இடத்துக்கு இடம் கொடுத்தற்கு காரணம் உள்ளது. 1989- ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு அவர் விளையாட வந்தார். அப்போது, சச்சினுக்கு 16 வயது. அதற்குபிறகு, 1998- ம் ஆண்டுதான் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும் வாய்ப்பு உருவானது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அவருக்கு நானும் வாக்கர் யூனசும் பந்து வீசவில்லை. அதற்கு பிறகு , ஷார்ஜா உள்ளிட்ட இடங்களில் ஒருநாள் போட்டிகளில்தான் நான் அவருக்கு பந்து வீசியுள்ளேன்.

ஆனால், டெஸ்ட் போட்டி என்பது வித்தியாசமானது. சச்சின் , சந்தேகமே இல்லாமல் கிரேட் பேட்ஸ்மேன்தான். அவரை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், நான் எனது பந்துவீச்சின் உச்சத்தில் இருந்த போது, சச்சினுக்கு பந்து வீச வாய்ப்பு கிடைக்கவில்லை அதனடிப்படையில்தான், நான் எனது பட்டியலை வெளியிட்டேன் '' என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments