சஞ்சய் ரவுத் திட்டி தீர்த்த சில மணி நேரத்தில் உத்தவிடம் இருந்து அழைப்பு ... சோனு சூட் விஷயத்தில் நடந்த திடீர் திருப்பம்!

0 6188


பிரபல வில்லன் நடிகர் சோனு சூட், புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இலவச விமானங்களை ஏற்பாடு செய்து வருகிறார். கேரளா மற்றும் மும்பையிலிருந்து இதுவரை 700 தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு விமானத்தில் சோனு சூட் அனுப்பியுள்ளார் இன்னும், ஏராளமான தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார். இதற்காக, தன் சொந்த பணத்தை செலவழித்துள்ளார். ஏர் ஏசியா போன்ற மலிவு விலை விமான நிறுவனங்கள் சோனு சூட்டுக்கு பக்கபலமாக இருக்கின்றன. 

வில்லன் நடிகர் ஹீரோவாக மாறியுள்ளார் என்று சோனு சூட் குறித்து மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன. இந்த செய்தி சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத்தின் கண்ணை உறுத்திவிட்டது போலும். 'தானும் செய்ய மாட்டான்; மற்றவரையும் செய்ய விடமாட்டான் ' என தமிழ்நாட்டில் வழக்குசொல் உள்ளது. அதேபோல,  மக்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்து வரும் சோனு சூட் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் சஞ்சய் ரவுத்.

'' சோனு சூட், தன்னை மகாத்மா போல காட்டிக் கொள்கிறார். விரைவில் அவர் பிரதமர் மோடியை சந்திப்பார், மும்பைக்கு செலிபிரட்டி மேனஜர் பதவி வாங்கி விட்டு வந்து விடுவார் . சோனு சூட் நல்ல நடிகர். ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் பொலிட்டிக்கலாகவும் நடிப்பார். புலம் பெயர் தொழிலாளர்களுக்கு சோனு சூட் உதவுவதின் பின்னணியில் அரசியல் ஆசை தெரிகிறது'' என்று  சஞ்சய் குற்றம் சாட்டியிருந்தார்.

சோனு சூட் மீது சஞ்சய் ரவுத் பாய்வதற்கு பின்னணி  உள்ளது. சமீப காலமாக, சோனு சூட் பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக தகவல் உலவி வந்தது. அந்த கோபத்தில்தான் சோனு சூட் மீது சஞ்சய் ரவுத் பாய்ந்தார். ஆனால், சோனு சூட் விஷயத்தில் நடந்த ஒரு சின்ன டர்னிங்பாயின்ட்தான் இந்த செய்தியின்  ஹைலைட்.  சஞ்சய் ரவுத் திட்டி தீர்த்த ஒரு சில மணி நேரத்தில் மாதோஸ்ரீ இல்லத்தில் இருந்து சோனு சூட்டுக்கு போன் அழைப்பு வந்தது. 'முதல்வர் உத்தவ் தாக்கரே உங்களை சந்திக்க விரும்புகிறார்... நேரில் வர முடியுமா?' என்று எதிர்முனையில் கேட்டார்கள். 

தொடர்ந்து, மாதோஸ்ரீ இல்லத்துக்கு சென்று, உத்தவ் தாக்கரே மற்றும் சிவசேனாவின் இளம் தலைவர் ஆதித்யா தாக்கரே ஆகியோரை சோனு சூட் சந்தித்து பேசினார். அப்போது,  சோனு சூட்டின் மனிதாபிமானமிக்க செயலை உத்தவ் தாக்கரே வெகுவாக பாராட்டினார். சந்திப்பின் போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட, ஆதித்யா தாக்கரே, 'மக்களுக்காக உழைக்கும் ஒரு நல்ல மனிதர் இன்று மகாராஸ்டிர முதல்வரை சந்தித்தார்' என்று கூறியுள்ளார். 

'எனக்கு அரசியல் ஆர்வம் துளியும் இல்லை. என் மனதிருப்திக்காக புலம் பெயர் தொழிலாளர்களுக்கு என்னால் முடிந்த உதவுகிறேன்' என்று பல முறை சோனுசூட் விளக்கம் அளித்துள்ளார். அதையெல்லாம், ஏற்காத சஞ்சய் ரவுத் திட்டி தீர்த்து விட்டார். நாம் திட்டியவரையே வீட்டுக்கு கூப்பிட்டு  உத்தவ்தாக்கரே  பாராட்டுவார் என்று சஞ்சய் ரவுத் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

இப்போது மனிதர் கப்சிப் ஆகி விட்டார்!

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments