இந்தியாவில் ஒரே நாளில்.. சுமார் 10,000 பேருக்கு கொரோனா..!

0 2153

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிப்பு 2 லட்சத்து 56 ஆயிரம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 206 பேர் உயிரிழந்ததை அடுத்து,  பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 9 ஆயிரத்து 983 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1 லட்சத்து 24 ஆயிரத்து 95 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 1 லட்சத்து 25 ஆயிரத்து 381 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றுக்கு இதுவரை 7 ஆயிரத்து 135 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 206 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிராவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3 ஆயிரத்து 7 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 85 ஆயிரத்து 975 பேர் தொற்றுக்கு ஆளான நிலையில், சீனாவின் பாதிப்பு எண்ணிக்கையான 83 ஆயிரத்தை கடந்துள்ளது. 39 ஆயிரத்து 314 பேர் குணமடைந்துள்ள நிலையில், 43 ஆயிரத்து 601 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்து 667 ஆக உள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்து 654 ஆக உள்ளது. நான்காம் இடத்தில் உள்ள குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் பாதிப்பு 10ஆயிரத்து 500ஐ தாண்டியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. மேற்குவங்கத்தில் பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்துள்ளது. கர்நாடகா, பீகாரில் 5 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆந்திரா, ஹரியானா, ஜம்மு-காஷ்மீரில் 4 ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவில் பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்குகிறது. அசாம், பஞ்சாப், ஒடிசாவில் பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தும், 3 ஆயிரத்தை நோக்கியும் அதிகரித்து வருகிறது. பாதிப்பு ஆயிரத்தை கடந்த பட்டியலில் கேரளா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகியவை உள்ளன.

இந்தியாவில் கொரோனா பரவி வரும் வேகம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், 2 லட்சத்தில் இருந்து இரண்டரை லட்சம் என்ற நிலையை 5 நாட்களில் எட்டியுள்ளது. கடந்த 3ஆம் தேதி 2 லட்சத்தை கடந்த எண்ணிக்கை, தற்போது 2 லட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது. 

வேர்ல்டோமீட்டர்ஸ் தரும் புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக இந்தியா 6ஆவது இடத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments