தமிழக மக்களுக்கு முதலமைச்சர் கடிதம்

0 10921

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 86 சதவீதம் பேர் எவ்வித அறிகுறிகளும் இல்லாதவர்கள் என தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாட்டிலேயே தமிழகத்தில் தான் குணமடைந்து வீடு திரும்புவோரின் சதவீதம் அதிகம் என தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்தொற்று தடுப்பு பணிகளில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாட்டிலேயே அதிகபட்சமாக 72 மையங்கள் மூலம் தினமும் சராசரியாக 13 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதையும், தனியார் மருத்துவ மனைகளில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜூன் 4ம் தேதி வரை தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அதன் மூலமே பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீதத்தினர் எவ்வித அறிகுறிகளும் இல்லாதவர்கள் என்பதை அறிந்துக் கொள்ள முடிந்ததாகவும் கூறியுள்ளார்.

நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் சதவீதம் அதிகமாக இருப்பதாகவும், உயிரிழப்புகளின் விகிதமும் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகத்திலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைவாக இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 123 அரசு மருத்துவமனைகளும், 169 தனியார் மருத்துவமனைகளும் என மொத்தம் 292 மருத்துவமனைகள் கோவிட் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 4ம் தேதி வரை 14 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனை உபகரணங்களும், 2 கோடியே 83 லட்சத்திற்கும் அதிகமான மூன்று அடுக்கு முகக் கவசங்களும், 37 லட்சத்திற்கும் அதிகமான என்95 முகக் கவசங்களும், 25 லட்சத்திற்கும் அதிகமான முழு உடல் கவச உடைகளும், கொள்முதல் செய்யப்பட்டு, களப் பணியாளர்களுக்கு
போதுமான அளவிற்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும், போதுமான அளவு கையிருப்பும் உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,384 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்றினை தமிழ்நாடு அரசு பேரிடராக அறிவித்து, ஜூன் 4ம் தேதி வரை 4 ஆயிரத்து 333 கோடியே 23 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும், ஜூன் 3ம் தேதி வரை 378 கோடியே 96 லட்சத்து 7,354 ரூபாய் வரப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், அதனை அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் 2 கோடியே 1 லட்சம் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு விலையில்லா ரேஷன் பொருட்களும், 1000 ரூபாய் நிவாரணமும், 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள், 14 நலவாரிய தொழிலாளர்கள், பதிவு செய்யப்படாத கைத்தறி நெசவாளர்கள், முடித்திருத்துவோர் என மொத்தம் சுமார் 35 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு 2000 ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் தொற்று பரவலை தடுப்பது சாத்தியமாகாது என தெரிவித்துள்ள முதலமைச்சர், அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவுதல், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்தல், வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments