13 மணி நேர அலைக்கழிப்பு - ஆம்புலன்சில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்..!

0 7782

டெல்லியில் கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்காததால் 13 மணிநேரம் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்து அலைக்கழிக்கப்பட்டு உயிரிழந்தார்.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நீலம் என்ற 30 வயதான எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் ஆம்புலன்சில் அவர் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் அடுத்தடுத்து 8 மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றும் நீலம் சிகிச்சை கிடைக்காமல் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார். படுக்கை காலியாக இல்லை என்று மருத்துவமனைகள் அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் அந்தப் பெண்ணை 13 மணி நேரம் ஆம்புலன்சில் வைத்து அலைந்த வேதனையை அவர் குடும்பத்தினர் பகிர்ந்துள்ளனர்.

இறுதியாக அந்தப் பெண் சிகிச்சை கிடைக்காத நிலையில் ஆம்புலன்சிலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து டெல்லி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. படுக்கைகள் காலியாக இருந்தும் கருப்புச் சந்தையில் அதனை விற்பனை செய்யும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கெஜ்ரிவால் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்பதை தெரியப்படுத்தும் செயலி ஒன்றை டெல்லி அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆனால் அந்த செயலில் உள்ள மருத்துவமனைகளை செய்தி ஊடகங்கள் தொடர்பு கொண்டு படுக்கை காலியாக இருக்கிறதா என்று விசாரிக்கும் போது, எந்த படுக்கையும் காலியாக இல்லை என்று மருத்துவமனைகள் பதிலளிக்கின்றன.

இதே போன்ற சம்பவம் 15 நாட்களுக்கு முன்பு டெல்லியின் கவுதம புத்தர் நகரிலும் நடந்துள்ளது. உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments