ஆபாச படங்களைக் காட்டி மிரட்டல்.. ”பாபநாசம்” பட பாணியில் ஒரு கொலை..!

0 5059

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், காதலித்த பெண்ணின் வீட்டில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் தாய், தந்தை, மகன், மகள் என குடும்பமே கைது செய்யப்பட்டுள்ளது. பாபாநாசம் திரைப்பட பாணியில் அரங்கேறிய கொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது சடலம் அரங்கநாதர் தெருவைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரின் வீட்டில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டது.

வீடு திறந்திருந்த நிலையில், பக்கத்து வீட்டுக்காரர் சடலத்தை பார்த்துவிட்டு போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். எனவே சடலம் மீட்கப்பட்டபோது வீட்டில் யாரும் இல்லை.

முதற்கட்ட விசாரணையில் கொத்தனாரான சிறுமியின் தந்தைக்கும் அன்பழகனுக்கும் பணியிடத்தில் நட்பு இருந்து, அதனை சாதகமாக்கி அன்பழகன் அவ்வப்போது சிறுமியின் வீட்டுக்கு வருவதும் வீட்டாருக்குத் தெரியாமல் அவரோடு பழகுவதுமாக இருந்துள்ளார். கஞ்சா பழக்கதுக்கு அடிமையானவன் என்று கூறப்படும் அன்பழகனின் நடவடிக்கை ஒரு கட்டத்தில் சிறுமிக்கு பிடிக்காமல் போகவே, அவர் அவனை விட்டு விலகத் தொடங்கியுள்ளார்.

நாளடைவில் இவர்களது பழக்கம் சிறுமியின் தந்தை, தாய், சிறுமியின் அண்ணன் உள்ளிட்டோருக்குத் தெரியவந்து, அவர்கள் அன்பழகனை கண்டித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியுடன் எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்களைக் காட்டி அன்பழகன் மிரட்டியதாகவும் அதன் காரணமாக குடும்பமே சேர்ந்து அவரை கொன்றிருக்கலாம் என்றும் கூறும் போலீசார், தலைமறைவாக இருந்த சிறுமி, சிறுமியின் தந்தை, தாய், அண்ணன் உள்ளிட்டோரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பாபாநாசம் திரைப்படத்தில் இளம் பெண்ணை ஆபாச புகைப்படங்களை காட்டி மிரட்டும் இளைஞனை கொலை செய்துவிட்டு குடும்பமே சேர்ந்து அதனை மறைக்க முயல்வது போன்ற காட்சிகள் இருக்கும். அதே பாணியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட அன்பழகன் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

சிறுமிகள், இளம்பெண்கள் உள்ள வீட்டில் நட்பின் பெயரால் அனுமதிக்கப்படும் நபர்கள் மீது கவனம் இருக்க வேண்டும் என்று கூறும் போலீசார், இதுபோன்ற நபர்களை எதிர்கொள்ளும் போது உணர்ச்சிவயப்படாமல், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் எச்சரிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments