பாதிப்பு அதிகரிக்கும் எனக் கணிப்பு... விழிப்புடன் இருந்தால் தொற்றாது..!

0 5975

சென்னையில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பதால், ஜூலை மாதம் சிகிச்சை பெறக்கூட மருத்துவமனைகளில் படுக்கை வசதி இருக்காது என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூன் மூன்றாம் தேதி நிலவரப்படி 17 ஆயிரத்து 598 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை ஜூலை ஒன்றாம் தேதி 74 ஆயிரத்து 700 ஆக அதிகரிக்கும் என்றும், ஜூலை 15ஆம் தேதி ஒன்றரை லட்சமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அளவுக்குச் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் இல்லை. இதே வேகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அத்தனை பேரும் சிகிச்சை பெறக் கூட மருத்துவமனைகளில் படுக்கை வசதி இருக்காது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். 

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கொரோனா முடிந்துவிட்டதாக மக்கள் கருதுவதாகவும் இதனாலேயே பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறும் வல்லுநர்கள் இனிமேல் தான் மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர். 

ஊரடங்கைத் திறமையாக நடைமுறைப்படுத்துவது, அறிகுறி உள்ளோரைச் சோதித்தல், தொற்றுள்ளோருக்குச் சிகிச்சை அளித்தல், தொடர்புடையோரைத் தனிமைப்படுத்தல் எனக் கொரோனா தடுப்புப் பணிகள் திறமையாகக் கையாளப்பட்டால் அக்டோபர் நடுப்பகுதியில் பாதிப்பு உச்சத்தை அடையும் என்றும், ஊரடங்கு இல்லாவிட்டால் ஜூலை மாத நடுப்பகுதியிலேயே உச்சத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அரசு கூறும் அறிவுரைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றி, விழிப்புடன் இருப்பதே தொற்றுக்கு ஆளாகாமல் தவிர்க்க ஒரே வழி என்கின்றனர். விழிப்புடன் விலகி இருந்தால் கொரோனாவை நாட்டை விட்டே விரட்டலாம்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments