சினிமா படப்பிடிப்புக்கு 100 கார்களை எடுத்து விற்ற மோசடி கும்பல்..! ரூ.25 லட்சம் கார் ரூ.3 லட்சம்..!

0 5295

ராமேஸ்வரத்தில் சினிமா படப்பிடிப்புக்கு என சொகுசுக் கார்களை வாடகைக்கு எடுத்து, 25 லட்சம் ரூபாய் காரை 3 லட்சம் ரூபாய்க்கு விற்ற மெகா மோசடிக் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கருவாடு வியாபாரிகள் கையில் கிடைத்த, கார்கள் கடத்தப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

ராமேஸ்வரத்தில் முறையான ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் கார்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்திருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அதன்படி வாகன சோதனையை தீவிரப்படுத்தி இருந்தார்.

வாகன சோதனையில் முறைகேடுகளை தவிர்க்க அனைத்து காவலர்கள் கையிலும் இ- சலான் எந்திரம் வழங்கப்பட்டது. அதன்படி காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்த விஜயரகு என்பவருக்கு இ- சலான் முறையில் அபராதம் விதித்தனர். அபராதத் தொகை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டதும், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த புவனேசுவரன் என்பவரது செல்போனுக்கு அபராத குறுஞ்செய்தி சென்றுள்ளது.

இதையடுத்து மாயமான தனது கார் தொடர்பாக அபராத குறுஞ்செய்தியைப் பார்த்து அதிர்ந்து போன புவனேசுவரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக புகார் பிரிவைத் தொடர்பு கொண்டு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

6 மாதங்களுக்கு முன்பு சினிமா சூட்டிங்கிற்கு என வாங்கிச் சென்ற கார் மாயமானதாகக் கூறப்பட்டதால் கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக புவனேசுவரன் தெரிவித்தார். இதையடுத்து, காரை ஓட்டிவந்தவரைப் பிடித்து விசாரித்த போது 25 லட்சம் ரூபாய் காரை 3 லட்சம் ரூபாய்க்கு கருவாட்டு மண்டி அதிபர் ஞானசிங்துரையிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்தார். அவரை பிடித்து விசாரித்தபோது மெகா கார் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சொகுசுக் கார் வைத்துள்ள நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் சினிமா ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு கார் கொடுத்தால் நல்ல வருமானம் வரும் என ஆசைவார்த்தை கூறி, புரோக்கர் எபினேசர் மூலமாக கார்களை பெற்றுள்ளனர்.

கார்களை ராமேஸ்வரத்திற்கு கொண்டு வந்து உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், தொழில் அதிபர்களுக்கு வருடாந்திர வாடகையாக 3 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு ஒப்பந்தம் போட்டு காரைக் விற்றுள்ளனர். கார் உரிமையாளர் கேட்டால் காரை திருப்பி கொடுத்து விட வேண்டும் என்றும், 3 லட்சம் ரூபாயில் 30 ஆயிரம் வாடகை போக மீதி தொகை திருப்பி கொடுக்கப்படும், இல்லையென்றால் 3 லட்சம் ரூபாய் காரை வைத்துக் கொள்ளலாம் என்று புதிய வடிவில் கார் வியாபாரத்தில் இறங்கியுள்ளனர்.

இதனால், பெரிய சொகுசுக் கார்களை கூட 3 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி ஊருக்குள் ஜபர்தஸ்தாக வலம் வந்துள்ளனர். இப்படி 100க்கும் மேற்பட்ட கார்களை ஞானசிங்துரை மோசடி செய்து விற்றுள்ள நிலையில், 23 கார்களை பறிமுதல் செய்துள்ள ராமநாதபுரம் காவல்துறையினர், மோசடி கும்பலை சேர்ந்த ஞானசிங்க துரை, எடிசன் ,எபினேசர், அஜய் சர்மா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், வீட்டுக்கு வெளியில் நின்ற தனது காரை, நண்பர் வீட்டில் நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. அந்த காரை எடுத்து நண்பர் சினிமா ஷூட்டிங்கிற்கு என்று கொடுத்துள்ளார். அந்த காருக்கு ஒருமாத வாடகை மட்டும் வந்த நிலையில் அதன்பிறகு கார் காணாமல் போனதாக காரின் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இ.பாஸ் கட்டாயம் என்பதால் இன்னும் பல கார் உரிமையாளர்களால் ராமேஸ்வரத்துக்கு செல்ல இயலவில்லை என்று கூறப்படுகின்றது.

கார் உரிமையாளர்கள் உஷாராக இல்லையென்றால் பல லட்சங்கள் முதலீடு செய்து வாங்கிய கார்கள் மோசடியாக பறித்துச்செல்லப்படும் என்பதற்கு சான்றாக நடந்துள்ளது இந்த சம்பவம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments