அடங்க மறுக்கும் கொரோனா பாதிப்பு 2.26 லட்சத்தை தாண்டியது..!

0 2629

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்தை கடந்துள்ளது. அத்தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 6 ஆயிரத்து 348ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகபட்சமாக 9 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 273 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 770ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 348ஆகவும் அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 1 லட்சத்து 10 ஆயிரத்து 960 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர்த்து நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சையில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 462 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 மாநிலங்களாக மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, குஜராத், ராஜஸ்தான் ஆகியவை திகழ்கின்றன. மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 77 ஆயிரத்து 793ஆகவும், தமிழகத்தில் 27 ஆயிரத்து 256ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் 25 ஆயிரத்து 4ஆகவும், குஜராத்தில் 18 ஆயிரத்து 584ஆகவும், ராஜஸ்தானில் 9 ஆயிரத்து 862ஆகவும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதேபோல் 5 மாநிலங்களிலும் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments