'உயிரணு என்னுடையது, ரூ. 25 லட்சம் கொடு!'- பெண் வங்கி அதிகாரியை மிரட்டிய தொழிலதிபர் கைது

0 8460


சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்தவர் சிவகாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). வங்கி ஒன்றில் அதிகாரியாக பணி புரிந்து வரும் இவர்,  கணவரிடத்திலிருந்து பிரிந்து தனியாக வசிக்கிறார். தனியாக வாழ்ந்த சிவகாமிக்கு தனக்கென்று  வாரிசை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்பது ஆசை. தன் வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர் ஒருவரிடத்தில் சிவகாமி நெருங்கி பழகியிருக்கிறார். பல்வேறு விஷயங்களை அவருடன் சிவகாமி பகிர்ந்து கொண்டுள்ளார்.

தன் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையையும் சிவகாமி, அந்த பெண் வாடிக்கையாளரிடத்தில் கூறியிருக்கிறார். இதையடுத்து, அந்த பெண் கொடுத்த யோசனையின்படி தனியார் மருத்துவமனை ஒன்றை அணுகி செயற்கை முறையில் சிவகாமி கருவுற்றார். ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தார். தனிமையில் தவித்த சிவகாமிக்கு தன் இரு குழந்தைகள்தான் வாழ்க்கை என்று மாறியது. சிவகாமியின் தனிமை குழந்தைகள் பிறந்ததால் குறைந்தது. மிகுந்த மகிழ்ச்சியான மனுஷியாக சிவகாமி மாறினார். இப்படி, மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த சிவகாமியின் வாழ்க்கையில், குழந்தை பெற்றுக் கொள்ள ஐடியா கொடுத்த தோழியின் கணவர் நாகூர் மீரான் மூலமாக விதி விளையாடத் தொடங்கியது.

பொதுவாக செயற்கை முறையில் கருவுற்றால் யாரின் உயிரணு பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட பல விஷயங்களை மருத்துவமனை நிர்வாகம் ரகசியமாக வைத்திருக்கும். ஆனால், நாகூர் மீரான் , சிவகாமியிடத்தில் 'உனது குழந்தைகள் நான் அளித்த உயிரணு வழியாக பிறந்தது. அதனால், எனக்கு நீ ரூ. 25 லட்சம் பணம் தர வேண்டும் . பணம் கொடுக்கவில்லையென்றால், உன்னுடையை இரண்டு குழந்தைகளையும் கொன்று விடுவேன்'' என்று மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக அடிக்கடி சிவகாமியின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார் நாகூர் மீரான்.  இதனால், மனம் வெறுத்து போன சிவகாமி , நாகூர் மீரான் மீது எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். தொடர்ந்து, பெரியமேடு பகுதியில் தோல்  நிறுவனம் நடத்தி வரும் நாகூர் மீரானை போலீஸார் கைது செய்தனர். இவர், மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments