வரதட்சனை டார்ச்சர் மாமியாருக்கு தீவைத்த வில்லேஜ் மருமகள்..! சாது மிரண்ட தருணம்

0 9584

புதுக்கோட்டை அருகே மாமியாருக்கு காபியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, தீவைத்து எரித்து கொன்றதாக கூறப்படும் புகாரில் மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர். வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு கணவனுடன் குடும்பம் நடத்தவிடாமல் டார்ச்சர் செய்ததால் மருமகள் எடுத்த ஆவேச முடிவு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. 

புதுக்கோட்டை மாவட்டம் வல்லக்கோட்டை அருகிலுள்ள மணியம்பலம் கிராமத்தை சேர்ந்த அருண்புலவன் - ராஜம்மாள் தம்பதியினரின் மகன் ரமேஷ். இவர் புதுக்கோட்டையில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு பிரதீபா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

சம்பவத்தன்று ராஜம்மாளின் கணவர் அருண்புலவன் தான் நடத்தும் டீக்கடைக்கு சென்று விட, மகன் ரமேஷ் மருந்து கடைக்கு சென்றுவிட வீட்டில் மருமகள் மட்டும் குழந்தையுடன் இருந்துள்ளார். 100 நாள் வேலைக்கு சென்று வந்த ராஜம்மாள் காபி குடித்த படி தனது மருமகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார். அதன் பின்னர் ராஜம்மாள் கலைப்புடன் படுத்து உறங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து துர் நாற்றத்துடன் கரும் புகை வெளியேறியுள்ளது.

பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் ராஜம்மாள் வலியால் அலறித்துடித்தபடி இருப்பதை கண்டனர். பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜம்மாள் பரிதாபமாக பலியானார். அவர் எரித்துக் கொல்லப்பட்டதாக சந்தேகம் எழுந்த நிலையில் வீட்டின் மற்றொரு அறையில் இருந்த மருமகளை பிடித்து விசாரித்த போது ராஜம்மாள் உடலில் தீப்பிடித்த மர்மம் விலகியது.

ரமேஷ் - பிரதீபா தம்பதிகளுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ள நிலையில், திருமணத்தின்போது பேசப்பட்டது போல நகை பணம் கொடுக்க வில்லை என்று கூறி மாமியார் ராஜம்மாள், தினமும் மருமகள் பிரதீபாவை நேரடியாகவும், சாடையாகவும் திட்டி தீர்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒரு கட்டத்தில் மீதம் உள்ள நகை பணத்தை வாங்கி வராவிட்டால் தனது மகனுடன் குடும்பம் நடத்த விடமாட்டேன் என்று மாமியார் ராஜம்மாள் மிரட்டியதாக கூறப்படுகின்றது. எங்கே தாயின் பேச்சை கேட்டு கணவர் தன்னை கைவிட்டு விட்டால் பெண் குழந்தையுடன் நம் நிலை என்னவாகும்? என்று யோசித்த பிரதீபா, கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக ஆவேசத்துடன் விபரீத முடிவு ஒன்றை கையில் எடுத்துள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டு வந்து, மருமகளிடம் காபி போட்டு தறுமாறு கூறியுள்ளார் ராஜம்மாள்... இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட பிரதீபா காபியில் 5க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனை குடித்த ராஜம்மாள் சற்று நேரத்தில் அப்படியே படுத்து தூங்கிவிட, வீட்டின் முன்பக்க கதவை சாத்தி விட்டு மண்ணென்ணையை எடுத்து வந்து ராஜம்மாள் மீது ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகின்றது.

இதில் உடல் முழுவதும் தீபற்றி பலத்த காயம் அடைந்த ராஜம்மாள் வலியால் துடித்தபோது பக்கத்து அறையில் இருந்த பிரதீபா காதுகேட்காதது போல இருந்ததால் அவர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தன்னை வாய்க்கு வந்தபடி வசைபாடியதோடு, கணவனுடன் நிம்மதியாக குடும்பம் நடத்த விடாமல் தடுத்த மாமியார் ராஜம்மாள், தினமும் பணம், நகை என செய்த டார்ச்சரால் ஏற்பட்ட மன ரீதியான பாதிப்புக்குள்ளானதால் தான் இந்த முடிவை கையில் எடுத்ததாக மருமகள் பிரதீபா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளதாக, சொல்லப்படுகிறது.

இதையடுத்து 9 மாத பெண் குழந்தையுடன் கைது செய்யப்பட்ட பிரதீபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.

மருமகள் தனது வீட்டிற்கு வாழவந்துள்ள இன்னொரு மகள் என்பதை உணராமல் அடிமை என்ற மனோபாவத்துடன் நடத்தினால், அந்த பெண் மனச்சிதைவுக்கு ஆட்பட்டு என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாக அரங்கேறியுள்ளது இந்த கோரச்சம்பவம். அதே நேரத்தில் மாமியார் மருமகள் பிரச்சகனையை சாதாரணமா வேடிக்கை பார்த்தபடி கடந்து செல்லும் கணவன்மார்களுக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கைப்பாடம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments