மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் வகுப்பு.. சென்னை மாநகராட்சி முயற்சி..!

0 1176

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக செல்போன்கள் வழங்கப்பட்டு ஆன்லைன் மூலம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடம் நடத்துகின்றன.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பாண்டு 9 மற்றும் 11 ஆம் வகுப்பு முடித்து வரும் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் சேர இருக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆன்லைன் பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் 70 பள்ளிகளில் படிக்கும் 5000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தொண்டு நிறுவனத்தின் உதவியோடு இலவசமாக செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் ஆன்லைன் வகுப்புகளுக்காக தனி அட்டவணை வடிவமைக்கப்பட்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இதனால் மாணவ மாணவிகளும் வீட்டிலிருந்தபடியே ஆர்வமாக பாடங்களை படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பள்ளியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மூலமாக பாடம் நடத்தும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு அது GCC education' என்ற யூடியூப் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதன் மூலம் மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் வீட்டிலிருந்தபடியே அதை திரும்ப திரும்ப பார்த்து பயன் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலவசமாக ஸ்மார்ட்போன்கள் வழங்கி அதன் வழியாக ஆசிரியர்கள் கற்பிப்பது புதுமையாகவும், எளிமையாகவும் இருப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

காலத்திற்கு ஏற்ற வகையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வரும் இந்த புதிய முயற்சி அனைவராலும் பாராட்டத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments