முத்தமிழறிஞருக்கு 97 வது பிறந்தநாள்

0 1429

மறைந்த முன்னாள் முதலமைச்சர்  கலைஞருக்கு இன்று 97வது பிறந்தநாள். திரைப்படத் துறையிலும், அரசியலிலும் அவர் படைத்த சாதனைகளில் சிலவற்றை விளக்குகிறது இந்தசெய்தித் தொகுப்பு...

கலைஞரின் அனல்பறக்கும் வசனத்தில் உருவான பராசக்தி திரைப்படத்தின் ஒரு காட்சிதான் இது. 1950களில் தொடங்கிய கலைஞரின் கலைப்பயணம் 50 ஆண்டுகளாக நீடித்தது. எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பும், கலைஞரின் அனல்பறக்கும் வசனங்களும் அக்காலத்தில் தமிழ்த் திரையுலகையே புரட்டிப் போடச் செய்தது.

மறக்க முடியுமா, மனோகரா, அரசிளங்குமரி, ரங்கோன் ராதா, மலைக்கள்ளன் போன்ற படங்களில் கலைஞர் எழுதிய அனல் தெறிக்கும் வசனங்கள் தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டவை.

தமது கணீர் குரலால் லட்சக்கணக்கான தொண்டர்களை தன்வசப்படுத்தியவர் கலைஞர். பெரியார், அண்ணா ஆகியோரின் பெயர்களை வாழ்நாள் முழுதும் உச்சரித்து வந்த அவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சித் தொண்டர்களை பகுத்தறிவு, சமூக நீதி , திராவிடம் போன்ற கொள்கைகளில் சமரசமின்றி வழிநடத்திச் சென்றார்.

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, மாநில சுயாட்சி, பெண்களுக்கு சமஉரிமை, சாதிப் பாகுபாடு ஒழிப்பு போன்ற திராவிடக் கொள்கைகளில் வாழ்நாள் முழுவதும் உறுதியாக இருந்தவர் கலைஞர்.

அரசியல் ரீதியாக கலைஞரை கடுமையாக எதிர்த்த பலரும், அவருடைய தமிழ்ப்பற்றையும், நினைவாற்றலையும் பெருமையுடன் குறிப்பிடத் தவறியதே இல்லை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தவர் கலைஞர்.

திரைத்துறை, இலக்கியம், இதழியல் என பன்முக வித்தகராகத் திகழ்ந்த கலைஞர் முத்தமிழ் அறிஞராகப் போற்றப்பட்டார்.
இலக்கணம், இலக்கியம், வரலாறு ஆகியவற்றில் ஏராளமான நூல்களை எழுதிய அவர், தமது உடன் பிறப்புகளுக்காக ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும், கடிதங்களையும் எழுதியுள்ளார்.

62 ஆண்டுகள் சட்டமன்றப் பணி 50 ஆண்டுகள் கட்சியின் தலைவர் பணி, 5 முறை முதலமைச்சர் பணி, 13 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த கலைஞரின் சாதனைகள் எண்ணிலடங்காதவை. இத்தனை பணிகளுக்கிடையே அவர் எழுத்துப் பணியையும் விடவே இல்லை. நாடகம், திரைப்படம், இலக்கியம், ஊடகம், சின்னத்திரை, அரசியல்களம் என அவர் கால்பதிக்காத துறைகளே இல்லை. தமிழக அரசியல் வரலாற்றில் தனது பேராற்றலாலும் பெரும் பணிகளாலும் அயராத உழைப்பினாலும் ஆற்றல்மிக்க படைப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கலைஞர்.

முதலமைச்சராகப் பதவி வகித்தபோது பல்வேறு தொழிற்சாலைகளைக் கொண்டுவர பாடுபட்டார் கலைஞர். விவசாயம், கல்வி, சமூகநலம், மகளிர் மேம்பாடு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் போன்ற துறைகளில் தமிழகத்தை மேம்பாடு அடைய இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டார் அவர்.

உடல் நல பாதிப்பு, முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து சில காலம் விலகியிருந்த கலைஞர் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட கலைஞரை, கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் மரியாதையுடன் நினைவுகூர்கின்றனர். அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் கலைஞர் விட்டுச் சென்ற சுவடுகள் காலத்தால் அழியாதவை...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments