மனிதன் ஒரு மகத்தான சல்லிப் பயல்...!

0 9386
வாயில் வெடி வெடித்ததால் ஆற்றுக்குள் இறங்கி நின்ற யானை


கடந்த 2016- ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் குரங்கு ஒன்று எரித்து கொல்லப்பட்டது. ஏதோ... குரங்குதானே என்று சாதாரணமாக இந்த சம்பவத்தை கடந்து சென்று விட முடியாது!

ஏனென்றால், அந்த குரங்குக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் அப்படி. குரங்கை எரித்துக் கொல்வதற்கு முன், அதை கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து துன்புறுத்தியுள்ளனர். உச்சக்கட்டமாக, குச்சி ஒன்றை எடுத்து குரங்கின் ஆசன வாயிலும் செலுத்தியுள்ளனர். வலியால் துடித்துக் கொண்டிருந்த குரங்கு மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றனர்.

குரங்குக்கு இத்தகையை கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் சி.எம்.சி கல்லூரியில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள். நோயாளிகளை  கனிவுடன் நடத்தி நோயை குணப்படுத்தும் பணியில் ஈடுபடப் போகும் பிற்கால மருத்துவர்கள்தான் மனம் பிறழ்ந்த நிலையில், வாயில்லா ஜீவனை துடிக்க துடிக்க கொன்றனர். 

தற்போது இதே போன்ற கொடுமையான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. இந்த முறை பாதிக்கப்பட்டது யானை. அதுவும் கர்ப்பிணி யானை. மலப்புரத்தில் யானைக்கு நிகழ்ந்த  அவலத்தை வனத்துறை அதிகாரி மோகன கிருஷ்ணன் என்பவர் தன் ஃபேஸ் புக் பக்கம்  வழியாக விவரித்துள்ளது, கேரள மக்களின் கண்களில் நீர் கசி வைத்து விட்டது. 

 மோகனகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, '' மலப்புரம் மாவட்ட கிராமங்களில் யானை ஒன்று உணவு தேடி அலைந்துள்ளது. கிராமத்துக்குள் வந்த யானைக்கு அன்னாசி பழத்தை சாப்பிட யாரோ கொடுத்துள்ளனர். மனிதனால் கொடுக்கப்பட்ட அன்னாசி பழம் தன் உயிருக்கு வைக்கப்பட்ட உலை என்பதை யானை அறிந்திருக்கவில்லை. பசியுடன் இருந்த யானை ஆசை ஆசையாக அன்னாசி பழத்தை உண்டது.  பழத்தை கடிக்க அதனுள்ளே வைக்கப்பட்டிருந்த வெடி வெடித்தது.

இதனால், யானையின் வாய் மற்றும் தும்பிக்கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியாலும் , பசியாலும் துடித்த யானை யாரையும் தாக்கவில்லை. அமைதியாக அருகேயிருந்த வெல்லியாற்றுக்குள் இறங்கி கழுத்தளவு தண்ணீரில் நின்றது. ஆற்றுத் தண்ணீர் தன் காயத்தை குணப்படுத்தும் வலியை குறைக்கும் என யானை நினைத்திருக்கலாம். கடந்த மே 27- ந் தேதி நாங்கள் கும்கி யானைகளை வரவழைத்து யானையை தண்ணீரிலிருந்து வெளியே கொண்டு வந்து சிகிசையளிக்க முயன்றோம்.

ஆனாலும், எங்களால் அதை காப்பாற்ற முடியவில்லை. யானையை பிரேத பரிசோதனை செய்த போதுதான், அதன் வயிற்றில் கரு உருவாகியிருப்பது எங்களுக்கு தெரிய வந்தது. இன்னும், 18 முதல் 20 மாதங்களில் அந்த யானை அழகான குட்டியை ஈன்றெடுத்திருக்கும். ஆனால், மனிதர்கள் செய்த தவறால் இரு அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்கின்றன '' என்று வேதனையுடன் கூறியிருந்தார். 

யானை இறந்து ஒரு வாரத்துக்கு  பிறகே, வனத்துறை அதிகாரியின் ஃபேஸ்புக் பதிவால்தான்  நாட்டு மக்களுக்கு இந்த சம்பவம் குறித்து  தெரிய வந்துள்ளது. அதோடு, இணையத்திலும் இந்த பதிவு வைரலாகியுள்ளது. 

கேரள மக்களுக்கு யானைகள் குழந்தைகள் மாதிரி. எந்த விழாக்களிலும் யானைகளுக்குத்தான் முக்கியத்துவம் வழங்கப்படும். கேரள பண்பாட்டுத் தலைநகராக கருதப்படும் திருச்சூர் நகரில் நடைபெறும் பூரம் விழாவிலும் யானைகள்தான் முக்கிய அங்கம் வகிக்கும். கேரள அரசு சின்னத்திலும் யானைதான் இடம் பெற்றிருக்கும்.

இப்படி,எல்லாவிதத்திலும் யானைகளுக்கு முக்கியத்தும் கொடுக்கப்படும் ஒரு மாநிலத்தில் காட்டு யானைக்கு நடந்த இந்த கொடூரம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.யானைக்கு இத்தகைய கொடூரத்தை நிகழ்த்தியவர்களுக்கு  தகுந்த தண்டனை வழங்க வேண்டுமென்று கேரள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கொடுக்கப்பட்ட உணவை வாங்கி நம்பிக்கையுடன் உண்ட யானைக்கு துரேகம் இழைத்து , 'மனிதன் ஒரு மகத்தான  சல்லிப்பயல் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறான்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments