3 பெண்களால் பணம் கொட்ட... ஒரு சிறுமி நரபலி..! தந்தையால் நிகழ்ந்த கொடூரம்

0 4861

பணமழை பொழியவைக்கும் மாந்த்ரீக சக்திக்காக 13 வயது மகளை நரபலி கொடுத்துவிட்டு, தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக நாடகமாடிய தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெண் மந்திரவாதி உள்ளிட்ட 3 பெண்களால் சிறுமி கொல்லப்பட்ட திகில் சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

புதுக்கோட்டை மாவட்டம் நொடியூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பன்னீர்செல்வத்தின் 13 வயது மகள், கடந்த 18 ந்தேதி அருகில் உள்ள குளத்திற்கு காலை வேளையில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது மர்ம கும்பலால் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமாரின் நேரடி கண்காணிப்பில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் கொல்லப்பட்ட சிறுமியின் உறவினரான குமார் என்பவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. தனக்கும் இந்த கொலைக்கு தொடர்பில்லை என்று கிராம நிர்வாக அலுவலரிடம் அவர் சரணடைந்த நிலையில், போலீசாரின் சிறப்பான கவனிப்பால் சிறுமி மரணத்திற்கான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

2 மனைவி மற்றும் பல்வேறு பெண்களுடனான தொடர்பால் பணக் கஷ்டத்தில் இருந்த பன்னீர் செல்வம், தனது குடும்ப கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக, தனது இரண்டாவது மனைவி மூக்காயியுடன், 4 வருடமாக தங்களுக்கு தெரிந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் மந்திரவாதி வசந்தி என்பவரிடம் குறி கேட்க சென்றுள்ளார்.

பணக்கஷ்டம் நீங்கி பணம் மலைபோல குவிய வேண்டுமென்றால் முதல் மனைவியின் பெண் குழந்தைகளில் யாரேனும் ஒருவரை நரபலி கொடுத்தால், உங்களுக்கு மாந்திரீக சக்தி கிடைக்கும், அதன் மூலம் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும், புதையல் இருக்கும் இடம் எல்லாம் தெரியும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார் மந்திரவாதி வசந்தி...

மாந்திரீகத்தில் அதீத நம்பிக்கை கொண்ட பன்னீர் செல்வம், 17ஆம் தேதி இரவு மந்திரவாதி வசந்தியை நொடியூருக்கு வரவழைத்து, தைலமர காட்டுப்பகுதிக்குள் இரவு நேரத்தில் பூஜைகளை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

18ஆம் தேதி பொழுது விடிந்ததும் காலை 7 மணி அளவில் தனது முதல் மனைவியின் 3ஆவது மகளான 13 வயது சிறுமியை குளத்தில் தண்ணீர் எடுத்துவர கூறியுள்ளார். மகள் குடத்துடன் சென்றதும் பின் தொடர்ந்து சென்ற பன்னீர், சிறுமியை தனியாக பேச வேண்டும் என்று தைலமரக்காட்டின் அடர்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

முதல்நாள் இரவில் பூஜை செய்த இடத்தில் வைத்து அச்சம் அடைந்த சிறுமி தாயிடம் கூறுவதாக சத்தமிட்டதால், அவர் தண்ணீர் சுமக்க கொண்டு வந்த துண்டால் சிறுமியின் கழுத்தை இறுக்க, இரண்டாவது மனைவி மூக்காயி அவரது சகோதரர் குமார், மந்திரவாதி வசந்தி, அவரது உதவியாளர் முருகாயி ஆகியோர் சிறுமியின் கை கால்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டணர்.

சிறுமி உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் தனது இரண்டாவது மனைவி மூக்காயியை மட்டும் இருக்க சொல்லிவிட்டு மந்திரவாதி உள்ளிட்ட அனைவரையும் அங்கிருந்து அனுப்பிவைத்த பன்னீர், இந்த நரபலி சம்பவம் பாலியல் தொந்தரவால் நிகழ்ந்த சம்பவம் போல இருக்க வேண்டும் என்று போலீசாரையும், பொதுமக்களையும் நம்பவைப்பதற்காக சிறுமியின் ஆடைகளை களைந்ததோடு, மகளின் உள்ளாடையை கழற்றி அப்பகுதியில் கண்ணில் படும்படி வீசி எறிந்துவிட்டு ஏதும் நடக்காதது போல் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

பின்னர் தனது மகள் காணாததுபோல் நடித்த பன்னீர்செல்வம், பொதுமக்கள் அனைவரையும் தேடவிட்டுள்ளார். அப்போது தனது மகள் காட்டுப்பகுதிக்குள் உயிருக்கு போராடுவது போல மருத்துவமனைக்கு தூக்கிசென்றுள்ளார். அப்போது வழியில் சிறுமி இறந்தது போல நாடகமாடியதும் வெளிச்சத்திற்கு வந்தது.

சிறுமியின் பிணகூறாய்வில் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்பதையும், கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து பன்னீர் செல்வத்தை கைது செய்த காவல்துறையினர் சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்த அவரது இரண்டாவது மனைவி மூக்காயின் உடலை பிணகூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் காட்டிக் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், பணம் கொட்டும் மந்திரம் என ஆசைக்காட்டிய மோசடியால் சிறுமியின் கொலைக்கு மூல காரணமாக இருந்த கொடூர பெண் மந்திரவாதி வசந்தி, உதவியாளர் முருகாயி ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மிகவும் சிக்கலான வழக்கில் இரவுபகலாக துப்புத்துலக்கி கொலையாளிகளை தகுந்த ஆதாரத்துடன் கைது செய்த காவல்துறையினர் பாராட்டுக்குரியவர்கள். அதே நேரத்தில் மக்களின் மூட நம்பிக்கையை முதலாக்கி பேய், பூதம், புதையல் என மோசடி செய்துவரும் மந்திரவாதிகள் மற்றும் குறிசொல்லும் கேடிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments