மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு.. மகளைக் கொன்ற கொடூர தந்தை ?

0 1975

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே காட்டுப்பகுதிக்குத் தண்ணீர் எடுக்கச் சென்ற 13 வயது சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, சிறுமியின் தந்தையே அவரை நரபலி கொடுத்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மகளைக் கொன்றால் கோடீஸ்வரன் ஆகலாம் என்ற பெண் மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு கொலை செய்திருப்பதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் 3வது மகள் வித்யா. கடந்த மாதம் 18ஆம் தேதி அங்குள்ள தைலமரக் காட்டுக்குள் ஊற்று நீர் எடுக்கச் சென்ற சிறுமி வித்யா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

முதலில் மர்ம நபர்களால் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வேறு கோணத்தில் விசாரணையை முன்னெடுத்தனர். 

கடந்த மாதம் 19ஆம் தெதி தஞ்சை மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த வித்யாவின் தந்தை பன்னீர் செல்வத்தின் பேச்சிலும் அவரது நடவடிக்கைகளிலும் மகளை இழந்த துக்கமே தெரியவில்லை என்பது பலரின் கருத்தாக இருந்தது. போலீசாரின் விசாரணையின்போதும் பன்னீர் செல்வம் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். பன்னீர் செல்வத்துக்கு 3 மனைவிகள் என்றும் இரு தினங்களுக்கு முன் அதில் மூக்காயி என்ற மனைவி உயிரிழந்தாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகளை நரபலி கொடுத்தால் செல்வந்தன் ஆகலாம் என பெண் மந்திரவாதி ஒருவர் பன்னீர் செல்வத்திடம் கூறியதாகவும் அதன் காரணமாகவே உறவினர்கள் சிலருடன் சேர்ந்து பன்னீர் செல்வம் மகளைக் கொன்றதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதனையடுத்து, பன்னீர்செல்வம், அந்தப் பெண் மந்திரவாதி, பன்னீர் செல்வத்தின் உறவினர் என 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments