68 நாட்களுக்குப் பின் அரசுப் பேருந்துகள் இயக்கம் !

0 3443
68 நாட்களுக்குப் பின் அரசுப் பேருந்துகள் இயக்கம் !

தமிழகம் முழுவதும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அரசுப் பேருந்துகள் 50 விழுக்காடு பயணிகளுடனும் சுகாதாரத்துறையின் கடுமையான விதிகளைப் பின்பற்றியும் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளன.

கோவை கோட்டத்தில் காலை 6 மணி முதல் ஆயிரத்து 326 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இம்மாவட்டத்தை பொறுத்தவரை 539 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம் நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்குள் மட்டும் தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினி திரவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதேபோல் பொள்ளாச்சியில் இருந்து அருகாமை நகரங்கள் கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியது. 

திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு காலை முதல் பேருந்து இயக்கம் தொடங்கியது. அதேபோல் நகர பேருந்து சேவையும் தொடங்கியுள்ளது.

57 இருக்கைகள் கொண்ட நகரப் பேருந்தில் 36  பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உட்பட அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க, கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவிய பின்னரே பயணிகளுக்கு பயணச் சீட்டுகளை வழங்குகின்றனர். இதேபோல் வத்தலகுண்டு பணிமனையில் இருந்து திண்டுக்கல், மதுரை, பெரியகுளம், தேனி, உசிலம்பட்டி என 20 வெளியூர் பேருந்துகளும், பட்டிவீரன்பட்டி, எம் வாடிப்பட்டி, கொடைரோடு, விருவீடு மற்றும் எழுவனம்பட்டி என 13 நகர பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

வேலூரில் இருந்து மாவட்ட எல்லைக்குள் 130 அரசுப் பேருந்துகளும் அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு 100 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பேருந்துக்குள் அனுமதிக்கப்பட்ட பயணிகள், தனிநபர் இடைவெளிவிட்டு இருக்கைக்கு ஒருவராக அமரவைக்கப்பட்டனர் . 

ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோயம்புத்தூர் நீலகிரி சேலம் நாமக்கல் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையத்தில் காய்கறி கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் அவை மாற்றப்பட்டு தற்போது 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் முகக்கவசங்களுடன் வந்த பயணிகள் மட்டுமே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் கைகளைச் சுத்தம் செய்ததற்குப் பிறகே பயணிகள் பேருந்துகளில் ஏறமாறு நடத்துநர்கள் வலியுறுத்தினர்

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி நன்னிலம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து 50 சதவீத பேருந்துகள் காலை ஆறு முப்பது மணி முதல் இயக்கப்படுகின்றன. திருவாரூரிலிருந்து நாகை கும்பகோணம் மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் பேருந்தின் பின் பக்கம் வழியாக மட்டுமே ஏற அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஓட்டுநர்கள் பயணிகளுக்கு கிருமிநாசினியை கையில் ஊற்றி சுத்தம் செய்தபிறகே பேருந்துக்குள் அனுமதித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 நகரப் பேருந்துகளும் 122 புறநகர் பேருந்துகளும் தற்போது இயக்கப்படுகிறது. பணிமனையில் பணிக்கு வந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர்கள் பணிக்கு அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுனர்களுக்கு முகக்கவசம் மற்றும் பேருந்தில் எவ்வாறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிவுரையும் வழங்கப்பட்டது.பேருந்துகளில் மூன்று இருக்கைகளில் இரு நபர்களும், இரண்டு இருக்கை உள்ள இடத்தில் ஒரு நபரும் கடைசி இருக்கையில் மூன்று நபர்களும் அமரவைக்கப்படுகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து காலை 6 மணி முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அதோடு முக கவசம் அணிந்த பயணிகளுக்கு மட்டுமே சமூக இடைவெளியை பின்பற்றி அமர அனுமதி அளிக்கப்படுகிறது. தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து 64 பேருந்துகளும், தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்திலிருந்து 144 பேருந்துகள் என மாவட்டம் முழுவதும் 208 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

நாகை தமிழக அரசின் உத்தரவையடுத்து நாகை மாவட்டத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருந்தும் குறைந்த அளவிலான பயணிகளே தற்போது பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். நாகை புதிய பேருந்து நிலையத்தில் ஓட்டுனர்கள் தாங்கள் இயக்க இருக்கும் பேருந்துகளுக்கு கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்து உற்சாகத்துடன் பேருந்துகளை இயக்கினர். நாகை பணிமனையில் இருந்து 33 பேருந்துகளும் சீர்காழி பணிமனையில் இருந்து 23 பேருந்துகள் மட்டுமல்லாது, மயிலாடுதுறை வேதாரணியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நீலகிரி மாவட்டம் உதகை,குன்னூர், கூடலூர் உட்பட மாவட்டதில் உள்ள 6 தாலுக்காவிற்கும், மேட்டுப்பாளையம்,  கோவை ஆகிய ஊர்களுக்கும் இன்று 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் முழுமையாக தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்த பிறகே இயக்கப்படுகின்றன. முகக்கவசம் அணிந்த பயணிகளுக்கு கைகளில்  கிருமி நாசினி தெளித்து அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுல் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் 50 விழுக்காடு பேருந்துகள், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, இருக்கை கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு இயக்கப்பட்டன. கிராமப் புறங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் வரத்து குறைவாகவே காணப்பட்டது. தொலை தூரங்களுக்கு அனுப்பப்படும் சிறப்பு பேருந்துகள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 30 பயணிகள் வந்த பின்னரே இயக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து இன்று இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணம் செய்ய பயணிகள் இல்லாததால் காலை நேர நிலவரப்படி 50 சதவிகிதம் இயங்க வேண்டிய பேருந்துகளில் 10 விழுக்காடு மட்டுமே இயக்கப்பட்டன. 

விழுப்புரம் பணிமனையில் இருந்து 330 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. விழுப்புரத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகள் என 50 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் ஒரு பேருந்துக்கு 32 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் பேருந்தில் ஏறும் பொழுது படிக்கட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவிய பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல் திண்டிவனம் பணிமனையில் இருந்து கிராமப்புறங்களுக்கு 11 வழித்தடங்களிலும் தொழுதூர், விழுப்புரம், செஞ்சி மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆறு வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முகக்கவசம் அணியாதவர்கள் பேருந்தில் ஏற அனுமதி மறுக்கப்படுகிறது. 

கடலூரில் 50 விழுக்காடு பேருந்துகளின் இயக்கம் தொடங்கிய நிலையில், பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறிக் கடை நடத்தி வந்தவர்கள் தங்களை பழைய இடத்துக்கே செல்ல அனுமதிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போதிய பயணிகள் இல்லாததால் கடலூர் பணிமனையில் இருந்து குறைந்தளவு பேருந்துகள் மட்டுமே இயங்கத் தொடங்கின. பேருந்து நிலையத்துக்குள் போடப்பட்டிருந்த தற்காலிக கடைகள் பேருந்துகள் வந்து செல்ல இடையூறாக இருந்தன. இதனையடுத்து அங்கிருந்த வியாபாரிகள் தங்களை பழைய இடத்துக்கே செல்ல அனுமதிக்குமாறு கூறி பேருந்துகளை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரத்திலிருந்து கடலூர், விருத்தாசலம் பண்ருட்டி திண்டிவனம் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 35 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அவற்றிலும் குறைவான பயணிகளே பயணம் செய்தனர். திட்டக்குடி பணிமனையில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கபசுர குடிநீர், கிருமிநாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கற்பூரம் ஏற்றி பூஜை செய்து வழிபட்ட பின்னர் ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கினர்.

திருப்பத்தூர் பயணிகள் வெகு குறைவாகவே இருந்ததால் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் வெறிச்சோடி காணப்பட்டன. இங்கிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் என 63 பேருந்துகள் இயக்கப்பட்டன.

சேலம் கோட்டத்தில் திருப்பத்தூரிலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு 41 பேருந்துகள் என 104 பேருந்துகள் காலை 6 மணி முதல் இயங்கத் தொடங்கியுள்ளன. ஆம்பூர் அரசுப் பணிமனையில் இருந்து 23 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே பேருந்தை இயக்க அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments