கொரோனா களம்.. மீண்டு வந்து களமிறங்கிய தூய்மைப் பணியாளர்..!

0 1456

சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தூய்மை பணியாளர் ஒருவர்,  ஏற்கெனவே தனக்கு பாதிப்பு ஏற்படக் காரணமாக இருந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மீண்டும் அர்ப்பணிப்போடு பணியைத் தொடங்கியுள்ளார். 

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், வீடு வீடாக கணக்கெடுத்தல், பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல், உயிரிழந்தவர்களை அடக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 219 பேருக்கு இதுவரை கொரோனா பரவல் உறுதியாகியுள்ளது. இதில் பட்டாளம் பகுதியைச் சேர்ந்த 53 வயது குமார் என்பவரும் ஒருவர். 22 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இவர், புரசைவாக்கம், புளியந்தோப்பு ஆகிய கொரோனா தாக்கம் அதிகமுள்ள இடங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரிடம் இருந்து 9 மாத பேத்தி உட்பட குடும்பத்தினர் 7 பேரும் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையிலும், தனிமை முகாம்களிலும் கடந்த ஒரு மாதமாக இருந்துவந்த அக்குடும்பத்தினர் மீண்டு திரும்பியுள்ளனர்.  

மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்ததைப் பொருட்படுத்தாமல், மீண்டும் தூய்மைப் பணியில் இறங்கியுள்ளார் குமார். தமக்கு கொரோனா ஏற்பட காரணமான பகுதிகளிலேயே அவர் மீண்டும் பணிகளை மேற்கொள்கிறார்.

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை தடுப்புப் பணிகளில் வேண்டிய சூழலில், இதுபோன்ற தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்புதான் தங்களுக்கு ஊக்கமருந்து என்கின்றனர் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் சகஊழியர்கள்...!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments