சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி - தற்கொலை எனத் தகவல்

0 1269
சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி - தற்கொலை எனத் தகவல்

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை அருகே, சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழந்தனர். மகன் இறந்த சோகம் தாளாமல் எரிவாயு சிலிண்டரை வெடிக்க வைத்து ஓய்வுபெற்ற ஆசிரியை, குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

திருச்சி நவல்பட்டு பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த 60 வயதான விஜயகவுரி என்பவர் ஓய்வுபெற்ற ஆசிரியை ஆவார். இவருக்கு விஜயலட்சுமி, வாணி என்ற இரு மகள்களும் விஜயகுமார் என்ற மகனும் இருந்தனர்.

டிப்ளமோ முடித்திருந்த விஜயகுமார், துவாக்குடி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் விஜயகுமாருக்கு தலையில் அடிபட்ட நிலையில், மருத்துவமனையைத் தொடர்ந்து, வீட்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், பிற்பகலில் விஜயகுமாரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாயாரும், விஜயகுமாரின் 2 சகோதரிகளும் பெரும் சோகத்தில் மூழ்கினர். இந்நிலையில் அவர்களது வீட்டில் இரவு ஏழுரை மணி அளவில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டதால், அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் ஒரு பகுதி இடிந்த நிலையில், 3 பெண்களும் உடல் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்தனர்..

தகவலறிந்து வந்த நவல்பட்டு போலீசார், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், மகன் இறந்த துக்கம் தாங்காது, சிலிண்டரை வெடிக்க செய்து, ஓய்வுபெற்ற ஆசிரியை, குடும்பத்தோடு தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments