அமைச்சருக்கு எதிராக அவதூறு - திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது

0 5713

கோவையில் அமைச்சர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஒருவரை கைது செய்து அழைத்து சென்ற போது, வழியில் ஆதரவாளர்களுடன் சென்று போலீசாரை மறித்து குற்றம் சாட்டப்பட்ட நபரை மீட்டுச்சென்றதாக திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரியில் இருந்து கல் தவறி விழுந்து வாகனத்தில் சென்றவர் காயம் அடைந்தார். சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்ட தோடு அவருக்கு வருவாய்துறை அதிகாரிகள் அபராதமும் விதித்துள்ளனர்.

இந்த நிலையில் லாரிகள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதால் விபத்துக்கள் நடப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான் இவற்றுக்கு காரணம் என்பது போல சமூக வலைதளங்களில் அவதூறு தகவல்கள் பரப்பபட்டதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை பரப்பியது பொள்ளாச்சியை சேர்ந்த திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் உதவியாளர் கீர்த்தி ஆனந்த் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, சாதாரண உடையில் சென்ற போலீசார், வால்பாறையில் இருந்து கீர்த்தி ஆனந்தை கைது செய்து கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு ஆம்னி வேனில் அழைத்து வந்தனர்.

ஆழியார் சோதனை சாவடி அருகே ஆம்னி வேன் வந்த போது, அங்கு ஆதரவாளர்களுடன் கும்பலாக நின்றிருந்த தென்றல் செல்வராஜ் தங்கள் கார்களை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி போலீசார் வந்த ஆம்னி வேனை மறித்ததாக கூறப்படுகின்றது.

பின்னர் வேனை சுற்றி கோஷம் எழுப்பி போலீசாருடன் தகராறு செய்து கீர்த்தி ஆனந்தை மீட்டுச்சென்றனர்

இந்த சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனிதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கூடுதல் போலீசாருடன் சென்று, கீர்த்தி ஆனந்தையும், போலீசாரை தாக்கி அவரை மீட்டுச்சென்றதாக தென்றல் செல்வராஜையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments