வேகம் காட்டும் கொரோனா பரவல்... 1.73 லட்சத்தை தாண்டியது பாதிப்பு..!

0 1643
வேகம் காட்டும் கொரோனா பரவல்... 1.73 லட்சத்தை தாண்டியது பாதிப்பு..!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் மேலும் 7 ஆயிரத்து 964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் இதுவரை இல்லாத அளவாக 7 ஆயிரத்து 964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை அளவுக்கு அதிகபட்சமாக 265 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 763ஆக அதிகரித்துள்ளது. அந்த தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 4 ஆயிரத்து 971ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றுக்கு மருத்துவமனைகளில் 86 ஆயிரத்து 422 பேர் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், 82 ஆயிரத்து 370 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 228ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 98ஆகவும் உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழும் தமிழகத்தில் கொரோனா தொற்றால் 20 ஆயிரத்து 246 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 154 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். டெல்லியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், குஜராத்தில் 16 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

ராஜஸ்தான் 8 ஆயிரத்து முன்னூறை கடந்துள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் 7 ஆயிரத்து 600யும், உத்தர பிரதேச மாநிலத்தில் 7 ஆயிரத்து 200யும், மேற்குவங்கத்தில் 4 ஆயிரத்தையும், ஆந்திரா, பீகாரில் 3 ஆயிரத்தையும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் 82 ஆயிரத்து 370 பேர் சிகிச்சையில் குணமாகியுள்ளனர். அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சாதனை அளவாக 11 ஆயிரத்து 264 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 26 ஆயிரத்து 997 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அதற்கடுத்து அதிகபட்சமாக தமிழகத்தில் 11 ஆயிரத்து 313 பேர் குணமாகியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments