கொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..! சாப்பாடு கேட்டு கூப்பாடு

0 9329
கொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..! சாப்பாடு கேட்டு கூப்பாடு

கொரோனா சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைமையத்தில் உள்ள நோயாளி ஒருவர் வேளைக்கு 40 சப்பாத்தியும், 10 தட்டு சாப்பாடும் கேட்டு அடம் பிடித்து வாங்கி உண்பதால், அவருக்கு தொடர்ந்து உணவு வழங்க இயலாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். வெட்டுக்கிளிகளுக்கு சவால் விடும் தட்டுக்கிளி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு....

பல ஆயிரம் மக்களுக்கு தேவையான உணவு பயிர்களை வேட்டையாடிவரும் வெட்டுக்கிளிகளுக்கு சவால் விடும் சாப்பாட்டு தட்டுக்கிளி அனூப் ஓஜா இவர் தான்..!
ஊரடங்கு காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வேலையிழந்து பீகார் மாநிலத்துக்கு இடம் பெயர்ந்த அனூப் ஓஜாவுக்கு, பக்ஸர் மாவட்டம் மஞ்வாரி பகுதியில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால். அவரை மஞ்வாரி தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொரோனாவுக்கான எந்த ஒரு அறிகுறியும் இன்றி லோடு ஆட்டோ போல சுற்றி வந்த அனூப் ஓஜா தினமும் காலையில் அங்கு வழங்கப்படும் 2 சப்பாத்தியும் மதியம் ஒரு சாப்பாடும் போதவில்லை என்று கூறப்படுகின்றது.

பசிவந்தால் போதும் மினி ஹல்க் ஆக மாறி அங்குள்ள அதிகாரிகளிடம் அட்டகாசம் செய்துள்ளான். இதனால் அவனது பசியை போக்கும் விதமாக உணவு வழங்க முடிவு செய்தனர். அதன்படி தினமும் காலை மற்றும் மாலையில் தலா 40 சப்பாத்தியும் மதியம் 10 சாப்பாடும் வழங்கினர்.

அதன் பின்னர் தான் அனூப் ஓஜா அமைதியானார். இதையடுத்து தினமும் 10 பேர் சாப்பிடக்கூடிய அளவுள்ள அரிசி சாதத்தை இவர் ஒருவரே சாப்பிடுவதால் முகாமில் உள்ள மற்றவர்களுக்கு உணவு கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதாவது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே உணவு அனுப்பி வைக்கப்படுவதால், தட்டுக்கிளி அனூப் ஓஜாவின் சாப்பாட்டு அத்தியாயம் குறித்து உயர் அதிகாரிக்கு புகார் அளித்துள்ளார். சிகிச்சை மைய பொறுப்பாளர்.

இதற்கிடையே 4ஆவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது சிகிச்சைக்கு வந்தவர் எப்போது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று அங்குள்ள அதிகாரி காத்திருக்க, தினமும் போசாக்கான சாப்பாடு கிடைப்பதால் தட்டுக்கிளி அனூப் ஓஜா உற்சாகமாக காணப்படுகின்றார்.

அதேநேரத்தில் ராஜஸ்தானில் சில தினங்கள் பசியால் வாடியதால், எங்கே சாப்பாடு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதற்றத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அதிகமாக சாப்பிடுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் அவர் அங்கிருந்து எப்போது புறப்படுவார் என அதிகாரிகள் எதிர்பார்த்து காத்திருக்க, தட்டுக்கிளி அனூப் ஓஜாவோ அடுத்த வேளை சாப்பாடு எப்போது வரும் என்று காத்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments