சீன விவகாரம் தொடர்பாக அண்மைக்காலத்தில் டிரம்புடன் பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை-மத்திய அரசு வட்டாரங்கள்

0 1245

பிரதமர் மோடியுடன் தாம் பேசியதாகவும், சீனா விவகாரத்தில் அவர் அதிருப்தியான மனோநிலையில் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், சீனா விவகாரம் குறித்து அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி அண்மையில் எதுவும் பேசவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பெரிய அளவிலான மோதல்போக்கு நிலவுவதாகக் குறிப்பிட்டார். தலா 140 கோடி மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளும், ராணுவ வல்லமை மிக்கவை என்றும், அதேசமயம் பிரதமர் மோடி அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் மோடியுடன் தாம் பேசியதாகவும், சீனாவுடனான தற்போதைய விவகாரத்தில் அவர் அதிருப்தியான மனோநிலையில் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். உதவிகரமாக இருக்கும் என இரு நாடுகளும் கருதும்பட்சத்தில், உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டால் தான் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்றும் அப்போது டிரம்ப் கூறினார்.

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள் குறித்து பிரதமர் மோடியுடன் தாம் பேசியதாகப் பொருள்படும் வகையில் டிரம்ப் கூறியிருந்த நிலையில், அத்தகைய உரையாடல் ஏதும் நடைபெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தொடர்பாக பேசியதாகவும், அதன் பிறகு இரு தலைவர்களும் தொடர்பு கொண்டு பேசவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, எல்லையில் நிலவும் மோதல் போக்கு தொடர்பாக, சீனாவுடன் இந்தியா நேரடித் தொடர்பில் இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எல்லைத் தகராறை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள சீனாவுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், இதற்கான வழிமுறைகள் ஏற்கெனவே உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments