பெண் பொறியாளர் திருமணத்தை வீடியோகாலில் ஆசீர்வதித்த பெற்றோர்..! மதுரை டூ மும்பை

0 7441
பெண் பொறியாளர் திருமணத்தை வீடியோகாலில் ஆசீர்வதித்த பெற்றோர்..! மதுரை டூ மும்பை

மதுரையில் இருந்து மும்பையில் தங்கி ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் பெண் பொறியாளரின் திருமணத்திற்கு பெற்றோர் செல்ல இயலாத நிலையில், வாட்ஸ் ஆப் வீடியோ காலில் தங்கள் மகளின் திருமணத்தைக் கண்டு கண்ணீருடன் ஆசீர்வதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், மீனா தம்பதியரின் மகள் அர்ச்சனா. இவருக்கும், மும்பையைச் சேர்ந்த மென்பொறியாளர் ராஜேஸ்வர் என்பவருக்கும் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி குருவித்துறையில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது.

மே 27 ஆம் தேதி அதே ஊரில் உள்ள கோவிலில் வைத்து உற்றார் உறவினர்களுடன் திருமணத்தை நடத்துவது என முடிவு செய்தனர்.கடந்த பிப்ரவரி மாதம் அர்ச்சனாவுக்கு மும்பையில் தனியார் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிகிடைத்ததால், அங்குள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்தார்.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால் திருமணத்திற்கு அர்ச்சனாவும், மாப்பிள்ளை வீட்டாரும் சோழவந்தானுக்கு வர இயலவில்லை.
அதற்கு பதிலாக மும்பையில் உள்ள மணமகன் வீட்டிலேயே திருமணம் நடத்துவது என இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.

திருமணத்தில் பங்கேற்பதற்காக கண்ணனும், உறவினர்களும் மும்பைக்கு காரில் செல்ல ஏற்பாடு செய்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இருப்பினும், திட்டமிட்டபடி மும்பை அண்டாப்ஹில் பகுதியில் உள்ள சித்தலா தேவி கோவிலில் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. நேரில் செல்ல முடியாமல் தவித்த கண்ணன், வாட்ஸ் அப் வீடியோ காலில் குடும்பத்தோடு மகளின் திருமணத்தை பரிதவிப்புடன் பார்த்தார்.

மகளின் கழுத்தில் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டி தாலியை வீடியோகாலில் தொட்டு ஆசீர்வதித்தனர். தங்களது மகளின் கழுத்தில் மங்கல நாண் ஏறியது, மகளின் நெற்றியில் மணமகன் பொட்டிடுவதை கண்டு கண்ணனின் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.

மொத்த குடும்பத்தினரும் வீடியோகால் மூலமாக திருண நிகழ்ச்சியை கண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர். மணமக்கள் ராஜேஸ்வர், அர்ச்சனா ஆகிய இருவரும் வீடியோ காலில் இங்குள்ள கண்ணன் குடும்பத்திடம் ஆசீர்வாதம் பெற்று தங்கள் பாசத்தை பகிர்ந்து கொண்டனர்.

பெற்றோர்கள் முன்னிலையில் திருமணத்தை நேரில் நடத்த முடியாதது மன வேதனையாக இருப்பதாகவும், ரயில் மற்றும் விமானத்திற்கு பதிவுசெய்தும் டிக்கெட் கிடைக்கவில்லை என கண்ணீர் மல்க மணப்பெண் தெரிவித்தார்.

அதிர்ஷ்டவசமாக மும்பையில் பெண் இருந்ததால் இந்த திருமணம் தடைபடவில்லை, இல்லையெனில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடத்த இயலாமல் போயிருக்கும் என்று சுட்டிக்காட்டும் பெண்ணின் உறவினர்கள், திருமண விஷயத்தில் பெண்ணுக்கு திருமணம் தள்ளிபோவது நல்லதல்ல என்பதால் பெண்ணின் பெற்றோர் அங்கு செல்ல இயலாத நிலையிலும் வீடியோகால் உதவியுடன் பெற்றோர் மற்றும் பெரியவர்களின் ஆசியை வழங்கச்செய்து திருமணத்தை நடத்தி முடித்ததாக தெரிவித்தனர்.

ஊரைக் கூட்டி, லட்சங்களைக் கொட்டி கொண்டாட்டமாக நடத்தப்படும் திருமணங்கள் எல்லாம் ஊரடங்கால் சிக்கனத் திருமணமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.மதுரையில் இருந்து மும்பையில் தங்கி ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் பெண் பொறியாளரின் திருமணத்திற்கு பெற்றோர் செல்ல இயலாத நிலையில், வாட்ஸ் ஆப் வீடியோ காலில் தங்கள் மகளின் திருமணத்தைக் கண்டு கண்ணீருடன் ஆசீர்வதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments