போருக்கு முனையுமா சீனா ? Xi Jinping அறிவிப்பால் வினா

0 17170

லடாக்கில், இந்திய எல்லையை ஒட்டியுள்ள தனது விமானப் படைத் தளத்தில், போர் விமானங்களை சீனா நிறுத்தி வைத்துள்ள நிலையில், மோசமான போர்ச்சூழலுக்கு தயாராகுமாறு அதிபர் ஷி ஜின்பிங் சீன ராணுவத்திற்கு பிறப்பித்துள்ள உத்தரவால் பதற்றம் அதிகரித்துள்ளது.

பதற்றம் நிலவும் இந்திய எல்லையான பாங்கோங் ஏரியில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில், திபெத்தில் உள்ள தனது நாக்ரி குன்சா விமானப்படைத் தளத்தில், சீனா பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளை நடத்துவது சாட்டிலைட் படங்கள் வாயிலாக அம்பலமாகி உள்ளது.

போர் விமானங்களுக்கான ஓடுதளங்களை புதிதாக அமைத்துள்ளதுடன்,  ஜே 11 அல்லது ஜே 16 ரக 4 போர் விமானங்களையும் தயார் நிலையில் சீனா நிறுத்தி வைத்திருப்பதும் அந்த படங்கள் வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது நம்மிடம் இருக்கும் சிறந்த போர் விமானங்களான சுகோய் 30 விமானங்களுக்கு ஈடானவை இந்த விமானங்கள் என கூறப்படுகிறது.

அதே சமயம் சீனாவின் போர் விமானங்கள் ஒருமுறை அதிபட்சம் ஒரு மணி நேரம் மட்டுமே பறக்கும் திறன் உள்ளவை என்றாலும், அவற்றால் லடாக்கில் தாக்குதல் வேலைகளில் ஈடுபட முடியும்.

ஆனால் நமது பல விமானப்படை தளங்களில் இருந்து புறப்படும் போர் விமானங்களால் 3 முதல் 4 மணி நேரம் வரை ஒரே மூச்சில் பறந்து தாக்குதல் நடத்த இயலும் என்பதால் இந்த விவகாரத்தில் இந்தியாவின் கரம் ஓங்கியுள்ளதாக ராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பெய்ஜிங்கில் சீனாவின் வருடாந்திர நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ஜி ஜின்பிங், கொரோனாவை மறந்து விட்டு சீன ராணுவம் போருக்கு தயாராக வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.

கொரோனா மெல்ல மறையும் என்பதால் போர்ப்பயிற்சியையும், போர்த்திறனையும் அதிகரித்துக் கொள்ளுமாறு அவர் ராணுவத்தை கேட்டுக் கொண்டிருப்பதும் பல யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. உச்சபட்சமாக, மிகவும் மோசமான போர்ச்சூழலுக்கு தயாராக இருக்குமாறு சீன ராணுவத்திற்கு அவர் விடுத்துள்ள அழைப்பு பதற்றத்தை அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

லடாக்கிற்கு அருகே 14,022 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சீனாவின் நகாரி குன்சா விமான தளம், எல்லைக்கு அருகில் இருப்பது சீனாவுக்கு சாதகமானதாக இருந்தாலும், அங்கிருந்து பறக்கும் போர் விமானங்களால் குறைந்த எண்ணிக்கையிலான போர் ஆயுதங்களையும் மட்டுமே சுமந்து செல்ல முடியும் என்பது சீனாவுக்கு பாதமானதாக அமைந்துள்ளது.

குறைந்த அளவுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்பப்படும் என்பதால் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே இந்த விமானங்களால் பறந்து எதிரிகளின் இலக்கை தாக்க முடியும். ஆனால்  பறக்கும் போதே எரிபொருளை நிரப்பும் வசதியை பயன்படுத்தி இந்திய போர் விமானங்கள் 3 முதல் 4 மணி நேரம் வரை பறந்து போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும் என ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சீனாவால், ஏற்கனவே இருதரப்பும் நேருக்கு நேர் நிற்கும் லடாக்கின் சில பகுதிகள் வரை மட்டுமே பறக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments