ஒரே தெருவில் 71 பேர்.! வி.ஆர்.பிள்ளை தெரு கொரோனாவிலிருந்து மீண்டு வந்தது எப்படி?

0 7905
ஒரே தெருவில் 71 பேர்.! வி.ஆர்.பிள்ளை தெரு கொரோனாவிலிருந்து மீண்டு வந்தது எப்படி?

சென்னையில் 71 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  வி.ஆர் பிள்ளை தெரு, உயிரிழப்பு இல்லாமல் அனைவரும் குணமடைந்து மீண்ட பகுதியாக மாறி உள்ளது.  இந்த பகுதி மக்கள் கொரோனாவை எப்படி எதிர் கொண்டனர்? கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது எப்படி? என விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு....

சென்னையில் ஏப்ரல் மாத இறுதியில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய நாட்களில் ஐஸ் ஹவுஸ் வி ஆர் பிள்ளை தெருவிலும் பாதிப்பு தொடங்கியது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலும் தினக்கூலிகளாக வசித்து வரும் அப்பகுதிவாசிகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

முதலில் ஏப்ரல் 27-ந் தேதி அந்த தன்னார்வலருக்கு கொரோனா தொற்று ஏற்பட, அவர் மூலம் அவர் குடும்பத்தினரும், வீட்டில் வாடகைக்கு வசித்த வட மாநிலத்தவர்களுக்கும் பரவ தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மாறியது. அடுத்த பத்து நாட்களுக்குள் ஒரே தெருவான அனுமந்தபுரம் வி.ஆர் பிள்ளை தெருவில் 71 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த 8-ம் தேதிக்கு பிறகு புதிய தொற்று இல்லை என்ற பகுதியாக மாறி, தன்னார்வலர் உட்பட சிகிச்சை பெற்று வந்த 71 பேரும் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

அப்பகுதியினர் முதலில் நோய் தொற்று குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்ததால் பரவியதாகவும், கொரோனா வேகமாக பரவி வருவதை உணர்ந்து ஒரு கட்டத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் ஒத்துழைத்ததால் கொரோனாவிலிருந்து மீண்ட பகுதியாக வி.ஆர் பிள்ளை தெரு மாறியிருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

தெருவின் இரண்டு பக்கமும் அடைக்கப்பட்டு ஒரு மாத காலமும் குழந்தைகள், முதியவர்களை வைத்துக் கொண்டு அச்சமுடன் வாழ்ந்த நாட்கள் குறித்து அப்பகுதி மக்கள் நினைவுகூர்ந்தனர்.

தினமும் உழைத்தால் தான் உணவு என்ற நிலையில் உள்ள ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் வாழும் பகுதி வி.ஆர் பிள்ளை தெரு. கையிலிருக்கும் சேமிப்பும் வீட்டு வாடகை, அத்தியாவசிய பொருள் என செலவாகிவிட, இனி எல்லாவற்றையும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் என வேதனை தெரிவிக்கின்றனர்.

கொரோனாவின் பாதிப்பு வெறும் உடல் ரீதியான பாதிப்பு மட்டுமல்ல. ஒவ்வொருவர் வீட்டிலும் பொருளாதார ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த பகுதியினர் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அதே வேளையில், ஒரு மாத காலம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அச்சமுடன் தான் வாழ்ந்தோம், ஆனால் நோய் தொற்றின் தாக்கத்தை உணர்ந்து தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டதால் மீண்டோம் என்ற நம்பிக்கையை விதைக்கின்றனர் அனுமந்தபுரம் வி.ஆர் பிள்ளை தெரு பகுதிவாசிகள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments