8 மாவட்டங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரையில் வெயில் கொளுத்தும் -சென்னை வானிலை மையம்

0 3574
8 மாவட்டங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரையில் வெயில் கொளுத்தும் -சென்னை வானிலை மையம்

தமிழ்நாட்டில், 8 மாவட்டங்களில், 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரையில் வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பம் தகித்தாலும், பல மாவட்டங்களில், வெப்பச்சலனம் காரணமாக கோடை மழை பெய்து வருகிறது.

மதுரை, திருச்சி, கரூர், தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும், திருத்தணியிலும், 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரையில் வெப்பம் பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், அனல் காற்று வீசக்கூடும் எனக் கூறியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில், தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரையில் வெப்பம் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 5ஆம் தேதி தென்மேற்கு பருவமழைத் தொடங்கும் என கணித்திருக்கும் நிலையில், தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் பகுதியிலும், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியிலும், மணிக்கு 50 கிலோ மீட்டர் வரையில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள், அந்த பகுதிகளுக்கு, மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையத்தில், 3 சென்டி மீட்டர் மழைப்பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments