சீனாவின் அத்துமீறலால் எல்லையில் எழுந்துள்ள பதற்றம் - பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை எனத் தகவல்

0 7457

சீனாவுடனான எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புப்படை தலைமைத் தளபதி, முப்படைகளின் தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். 

சிக்கிம் மற்றும் லடாக்கில் உள்ள இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் சீன துருப்புக்களின் அத்துமீறலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் பாங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் இந்திய-சீன ராணுவம் இடையே மோதல் நிலைமை உருவானது. இதனிடையே லடாக் பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய வான் எல்லையில் 2 முறை அத்துமீறி பறந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன துருப்புக்களை தடுக்க முயன்றதில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது. 

லடாக்கிற்கு அருகே திபெத்தில் உள்ள தனது நகாரி குன்சா விமானப்படைத் தளத்தை சீனா விரிவாக்கம் செய்வதும், அங்கு 4 போர் விமானங்களை நிறுத்தி வைத்திருப்பதும் கடந்த 20ஆம் தேதி எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

ராணுவ ஹெலிகாப்டர்களை சீனா தயார் நிலையில் வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவின் முஸ்தீபுகள் போரை நினைவுபடுத்துவதாக இருப்பதால் இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில், 73 நாட்கள் வரை நீடித்த டோக்லம் மோதல் போக்கிற்குப் பிறகு, தற்போது இது தீவிரமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீனா மேலும் 5 ஆயிரம் வீரர்களை இறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் டெல்லி உயர்மட்டக் கூட்டத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், 3 படைத் தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோருடன் நிலைமை குறித்து மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னதாக வெளியுறவுச் செயலருடன் தனியாக மோடி விவாதித்ததாக கூறப்படுகிறது.

மோடியின் ஆலோசனை துவங்குவதற்கு முன்னர் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments