கடன் கொடுத்தவரை கொல்ல முயற்சி - உயிர் தப்பிய பள்ளி ஆசிரியர்

0 4719

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியரை, அவரிடம் பணம் வாங்கிய நபர் காரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ், சின்னமலைக்குன்று அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். (6 மாதங்களுக்கு முன், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த சோழபுரத்தினைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன் என்பவன் முகநூல் மூலம் இவருக்கு அறிமுகமானான். கோவிந்தராஜுவின் வசதியான பின்னணியை அறிந்துகொண்டு நல்லவன் போலவே நடித்து நண்பனாகவும் ஆனான்.

தாம் கார்களை வாங்கி வாடகைக்கு விடும் தொழில் செய்வதாகவும், அதன் மூலம் பலர் லட்சங்களில் சம்பாதிப்பதாகவும் அனந்தகிருஷ்ணன் கூறியிருக்கிறான். தனது வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை வாங்கிக் கொடுப்பது மட்டுமின்றி, அவற்றை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டு பணம் கொடுப்பது வழக்கம் என்றும், இதனால் தன்னிடம் பணம் கொடுப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பதாகவும் கூறியுள்ளான். அப்படி பலன் அடைந்தவர்களில் ஒருவர் என சரவணக்குமார் என்பவனையும் அறிமுகம் செய்துள்ளான்.

இதையெடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கோவிந்தராஜ், வாகனங்கள் வாங்க 25 லட்ச ரூபாயை அனந்தகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார். அவனும் சில வாகனங்களின் புகைப்படங்களை அனுப்பி இந்த வாகனங்களை கோவிந்தராஜுவிற்காக வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளான். ஒரு மாதம் மட்டுமே பணம் கொடுத்ததவன், அதன்பின்னர் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நாட்கள் மாதங்களாக உருண்டு ஓடிய நிலையில், சந்தேகமடைந்த கோவிந்தராஜ், தனக்காக வாங்கிய கார்களை பார்க்க வேண்டும் என அனந்த கிருஷ்ணனிடம் கூறியுள்ளார். அதற்கும் அனந்தகிருஷ்ணன் பொருந்தாத காரணங்களைக் கூறி தள்ளிப்போட, கோவிந்தராஜ் போலீசில் புகாரளிக்கப்போவதாகக் கூறியுள்ளார். உஷாரான அனந்தகிருஷ்ணன் அவரை எட்டையபுரத்திற்கு வருமாறும் 25 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளான். அதனை நம்பி எட்டயபுரம் சென்ற கோவிந்தராஜ் மீது கார் ஒன்று மோதியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விசாரணையில் அனந்தகிருஷ்ணன் தான் அந்தக் காரை ஓட்டிவந்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோவிந்தராஜை கொலை செய்துவிட்டு விபத்து போல சித்தரிக்க சரவணக்குமாருடன் சேர்ந்து அனந்தகிருஷ்ணன் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து, அனந்தகிருஷ்ணனையும் சரவணக்குமாரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முகம் பார்த்து பழகும் நட்புகளே போலியாக இருக்கும் இந்தக் காலத்தில், முகநூல் மூலம் கிடைத்த நட்பை நம்பி 25 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்தது மிகப்பெரிய தவறு என்கின்றனர் போலீசார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments