திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமீனில் விடுவிப்பு

0 6073
எஸ்.சி, எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.சி, எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில், பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற உள்ளரங்க கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு சர்ச்சைக்குள்ளானது.

நீதித்துறையில் தாழ்த்தப்பட்டோருக்கு திமுக பிரநிதிநிதித்துவம் பெற்றுத் தந்தது என்றும், இதுதொடர்பான ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டி அது திமுக போட்ட பிச்சை என்றும் ஆர்.எஸ்.பாரதி பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் அளித்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு பின்னர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை நங்கநல்லூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து எழும்பூரில் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள, குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அங்கு திமுக முக்கிய பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குழுமினர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். 

இதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா கால ஊழலையும், நிர்வாகத் தோல்வியையும் திசை திருப்பவே, ஆர்.எஸ்.பாரதி அதிகாலையில் கைது செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை அதிகாலையில் தூசு தட்டி எடுத்து ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதற்கு, தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments